“மாணவி தற்கொலை:தங்கள் அரசியலுக்காக கையில் எடுப்பது வருத்தம்” – பள்ளி நிர்வாகம் விளக்கம்!

Default Image

மாணவி லாவண்யாவின் தற்கொலை விவகாரத்தை,தங்கள் அரசியலுக்காக ஒரு சில பிரிவினர் கையில் எடுப்பது வருத்தம் அளிக்கிறது என்று பள்ளி நிர்வாகம் விளக்கம்.

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி 12-ஆம் வகுப்பு படித்து வந்த லாவண்யா விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் தமிழக முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில்,மாணவியின் லாவண்யாவின் இறப்பு குறித்து,தங்கள் அரசியலுக்காக ஒரு சில பிரிவினர் கையில் எடுப்பது வருத்தம் அளிக்கிறது என்று பள்ளி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.இது தொடர்பாக,பள்ளி நிர்வாக தூய இதய மரியன்னை சபை தனது அறிக்கையில் கூறியுள்ளதாவது:

“மாணவியின் இழப்பு பள்ளிக்கும் நிர்வாகத்திற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.இறந்த லாவண்யா எட்டாம் வகுப்பிலிருந்து எம் விடுதியில் தங்கிப் படித்து வந்தாள்.விடுமுறைகளில் கூட வீட்டிற்குச் செல்லாமல் எம்மோடு தங்குவதை விரும்பியள்.அவ்விதத்தில் எங்கள் அனைவருக்கும் பிள்ளையாகவே அவள் வளர்ந்தாள்.அதனால்தான் பத்தாம் வகுப்பில் 489/500 மதிப்பெண்கள் பெற்றாள்.அவளது இறப்பை ஒட்டிப் பல்வேறு வதந்திகள் தற்போது பரவுகின்றன.

எனினும்,மாணவி தன்னுடைய இறுதி வாக்குமூலத்தில் விடுதி காப்பாளர் மீது குற்றம் சுமத்தியதாக அறிகின்றோம். காவல்துறை மற்றும் கல்வித் துறையின் முறையான சட்ட விசாரணைகளுக்கு எப்போதும் நிர்வாகம் துணை நிற்கும். கிறிஸ்தவ சமூகம் சட்டத்தை மதித்து வாழும் ஒரு சமூகமாகவும்.அதே வேளையில், எம்மிடம் பயிலும் குழந்தைகள் பல மதங்களையும் சமூகங்களையும் சார்ந்தவர்கள்.எவரது மத நம்பிக்கையிலும் நாங்கள் குறுக்கிடுவதில்லை. அனைவரது நம்பிக்கையையும் நாங்கள் பெரிதாக மதிக்கிறோம்.இதுவே எங்கள் பொது வாழ்வின் அடிப்படையாக உள்ளது.

இச்சூழலில் இத்துயர சம்பவத்தை தங்கள் அரசியலுக்காக ஒரு சில பிரிவினர் கையில் எடுப்பதும்,திசை திருப்புவதும்,பொய்களை விதைப்பதும், ஊடகங்களிலே அவதூறு செய்வதும்,இல்லாத ஒன்றை இட்டுக்கட்டி எம் நிறுவனங்களைக் குற்றப்படுத்துவதும்,எமது சமூக சமர்ப்பணத்தைக் கொச்சைப் படுத்துவது மிகவும் வருந்தத்தக்கது.

மேலும்,உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிட வேண்டாமென ஊடக நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறோம்.இதுபோன்ற துன்ப வேளைகளில் உண்மையின் பால் உறுதியுடன் இருக்கும் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி”,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்