வேன் மோதி மாணவர் பலி – தனியார் பள்ளிக்கு விடுமுறை!
சென்னையில் வேன் மோதி 7 வயது சிறுவன் உயிரிழந்ததை தொடர்ந்து, தனியார் பள்ளிக்கு விடுமுறை.
சென்னை வளசரவாக்கத்தில் வேன் மோதி 2-ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்ததை தொடர்ந்து, அந்த தனியார் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இன்று வளசரவாக்கம் ஆழ்வார் திருநகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ரிவர்சில் வந்த வேனால் 2-ம் வகுப்பு மாணவர் சிக்கி பலியானார். மாணவரின் உயிரிழப்பை தொடர்ந்து வேன் ஓட்டுநர் பூங்காவனத்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேன் மோதி மாணவர் உயிரிழந்த பள்ளியில் மாவட்ட கல்வி அதிகாரி மார்க்ஸ் நேரில் சென்று விசாரணையில் ஈடுபட்டுள்ளார். இதுபோன்று அம்பத்தூர் வருவாய்த்துறை அதிகாரி இளங்கோவும் விபத்து ஏற்பட்ட பள்ளியில் விசாரணை நடத்துகிறார். மேலும், விபத்து நடந்த பள்ளியின் நிர்வாகிகளிடம் துணை காவல் ஆணையர் மீனா விசாரணை நடத்தி வரும் நிலையில், தனியார் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
இதனிடையே, பள்ளி வேன் மோதி 2ம் வகுப்பு மாணவர் உயிரிழந்ததை தொடர்ந்து, இன்றைக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தனியார் பள்ளிக்கு மெட்ரிகுலேசன் இயக்குனர் உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.