சிறைக் கைதிகளின் வழிபாட்டு உரிமைகளை பறிக்கும் திமுக அரசுக்கு கடும் கண்டனம்! – இபிஎஸ்

ADMK Chief Secretary Edappadi Palanisamy

சிறைக் கைதிகளின் வழிபாட்டு உரிமைகளை பறிக்கும் திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறைச் சாலைகள் என்பது தவறு செய்பவர்களுக்கு தண்டனை அளிக்கும் இடம் மட்டுமல்ல, அவர்களை நல்வழிப்படுத்தும் இடங்களுமாகும்.

கடந்த 29 மாத திமுக ஆட்சியில், சிறைச் சாலைகளில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாவதாக செய்திகள் வருகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக, சிறைக் கைதிகளின் வழிபாட்டு உரிமைகள் பறிக்கப்படுவதாக நாளிதழ்களில் கட்டுரைகள் வெளிவந்துள்ளன. எந்த மதத்தைச் சார்ந்த சிறைக் கைதியாக இருந்தாலும், ஆண்டாண்டு காலமாக அவர்களுக்கு வழிபாட்டு உரிமைகள் வழங்கப்பட்டு வந்தன.

குறிப்பாக, வேலூர் மத்திய சிறைச் சாலையில் காலம் காலமாக இந்து, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த சிறைவாசிகள், அவர்களுடைய மத நம்பிக்கையின்படி வழிபடுவதற்கு பிரத்யேக இடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அதிமுக ஆட்சியிலும் இந்த நடைமுறை தொடர்ந்தது.

அந்தந்த மத குருமார்கள், பண்டிகை காலங்களில் சிறைக்குள் அனுமதிக்கப்பட்டு சிறப்புப் பிரார்த்தனை செய்து நல் எண்ணங்களை வளர்க்கவும், கைதிகளின் நலனுக்காக பிரார்த்தனை செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. கொரோனா பெருந்தொற்று காலத்தில், சிறைவாசிகளிடையே இந்த வைரஸ் தொற்று பரவக்கூடாது என்பதால், சிறைச் சாலைகளில் உள்ள வழிபாட்டுத் தலங்களுக்கும் தடை ஏற்படுத்தப்பட்டது.

இந்த திமுக அரசு ஆட்சிக்கு வந்தபின்பு, கொரோனா நோய்த் தொற்றுக்குப் பிறகும் ஏதோ ஒரு காரணத்தால் சிறைகளில் மத வழிபாடுகள் நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.  திமுக ஆட்சியாளர்கள், சிறைவாசிகள் மத்தியில் மனஉளைச்சலை ஏற்படுத்துவது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். எனவே, தமிழக சிறைகளில் உள்ள இஸ்லாமிய கைதிகள், அவர்களுடைய மதக் கடமைகளை நிறைவேற்றுவதற்கு வழிவகுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்