வலுவான அதிமுக-பாஜக உறவின் உறுதி தொடரும்..! அறிக்கை வெளியிட்ட அண்ணாமலை..!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் அதிமுக-பாஜக கூட்டணி குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், ‘தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியை வெற்றிகரமாக முன்னிறுத்திக் கொண்டிருக்கும் அதிஅதிமுக, தற்போது மிகவும் பலமாகவும் உறுதியாகவும் இருக்கிறது. இந்த பலமும் உறுதியும் மேலும் வலுப்பெறும் என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுவாக உறுதியாக இருக்கிறது. இந்த உறவும் உறுதியும் இனிமேலும் இப்படியே தொடர்வதையே பாரதிய ஜனதா கட்சி விரும்புகிறது.
அதிமுகவில் யாரை இணைத்துக் கொள்ள வேண்டும்? யாரையெல்லாம் நினைத்துக் கொள்ளக்கூடாது? என்ற முடிவுகளை எடுக்க அந்தக் கட்சியிலேயே தகுதி வாய்ந்த சிறந்த தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு அந்த முடிவுகளை எடுக்க முழு அதிகாரமும், தகுதியும் இருக்கிறது. அதில் தலையிடவோஅல்லது கருத்துச் சொல்லவோ எந்த மாற்றுக் கட்சிக்கும். (அது கூட்டணி கட்சியாக இருந்தாலும் கூட) அந்த உரிமை இல்லை என்பதை நான் உணர்ந்தவனாக இருக்கிறேன்.
பொதுவாகவே இந்தியா முழுவதும் பல கூட்டணி கட்சிகளுடன் இணைந்து செயல்படும் பாஜக எந்த கட்சியின் உள்கட்சி விவகாரத்தில் உள்கட்சி ஜனநாயகத்தில் தலையிடுவதில்லை. அதை நானும் உறுதியாகக் கடைபிடிக்கிறேன். அதிமுக உறுதியாக இருக்க வேண்டும் என்று நான் சொன்ன கருத்திற்கு கண் காது மூக்கு ஜோடித்து ஊடகச்சித்திரம் வரையப்பட்டுள்ளது.
மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் திரு ஒபிஎஸ் அவர்களும், மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் திரு எடப்பாடி அவர்களும் கடுமையான காலத்திலும் கட்டுப்பாட்டுடன் கட்சியை கட்டிக்காத்து வந்துள்ளனர், மேலும், பாரதிய ஜனதா கட்சியுடன் மிகுந்த நல்லுறவைப் பேணி வந்திருக்கிறார்கள், நாங்களும் அதிமுகவும் பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த நல்லெண்ணத்துடன் மரியாதையுடனும் இருக்கிறோம்.
தேசிய ஜனநாயக கூட்டணி சிறப்பாக செயல்பட்டது, இனிவரும் காலத்திலும் சிறப்பாக செயல்படும் இதற்கு எடப்பாடி அவர்கள் தலைமையில் நடைபெற்ற அதிமுகவின் நல்லாட்சியே சாட்சி. ஆகவே அதிமுகவும்-பாஜகவும் எங்கள் உறவினை இன்னும் உறுதியுடன் முன்வைப்போம்.’ என தெரிவித்துள்ளார்.