போராட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி ! இரக்கமற்ற அரசு என்பதற்கு உதாரணம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை
கோவை மேட்டுப்பாளையத்தில் உள்ள நடூர் பகுதியில் உள்ள ஏடி காலனியில் குடியிருப்பின் சுவர் சாய்ந்ததால் 4 வீடுகள் இடிந்து விழுந்தன.இந்த சம்பவத்தின் போது வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 17 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.17 பேர் உயிரிழக்க காரணமான வீட்டின் உரிமையாளர்கள் கைது செய்யக் கோரி நேற்று இறந்தவர்களின் உறவினர்களும் ,பொதுமக்களும் அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் நடத்தினார்கள்.இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியது .ஆனால் அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.இதனால் பொதுமக்கள் -போலீசாருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதத்தின் கைகலப்பு ஏற்பட்டதால் கூட்டத்தை கலைக்க போலீசார் முயன்றபோது பொதுமக்களுக்கும் ,போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.அப்போது மக்கள் மீது தடியடி நடத்தப்பட்டது.
மேட்டுப்பாளையத்தில் ‘தீண்டாமைச் சுவர்’ இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்திருக்கும் கொடுமையை என்னவென்று சொல்வது?
மாவட்ட நிர்வாகத்தையும் காவல் துறையையும் அநியாயமான முறையில் ஆட்டுவிப்பது யாரென்று ஊர் உலகத்திற்கு அறிவிக்கப்பட வேண்டும். சட்டப்படி உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். pic.twitter.com/outHZQ5C2P
— M.K.Stalin (@mkstalin) December 3, 2019
இந்த நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில், கோவை மேட்டுப்பாளையத்தில் நடந்துள்ள, எவருடைய இதயத்தையும் உலுக்கிடும், கோரச் சம்பவத்தில் உயிரிழந்திருக்கும் 17 பேரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்
“இறந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்” என்று, கோவை – நீலகிரி நெடுஞ்சாலையில், பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் சாலை மறியல் செய்துள்ளார்கள். அவர்களுக்கு உரிய பதில் கிடைக்கவில்லை. “மூன்று மணிக்குள் சொல்கிறோம்” என்று ஏதோ சமாதானம் சொல்லி அனுப்பி வைத்துள்ளார்கள்.
சாலை மறியல் செய்தவர்கள், இறந்தவர்களின் உடல்களை வாங்குவதற்காக மேட்டுப்பாளையம் மருத்துவமனையில் கூடி இருந்துள்ளார்கள். அவர்களைக் கலைப்பதற்காக, காவல்துறை வெறிகொண்டு தாக்குதல் நடத்தி இருக்கிறது.”வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதை”ப் போல, எதற்காக இத்தகைய தாக்குதலை காவல்துறை நடத்த வேண்டும்? திட்டமிட்டு பொதுமக்களை கண்மண் தெரியாமல் தாக்கியுள்ளார்கள். அதுவும் மருத்துவமனை வளாகத்திலேயே இத்தாக்குதல் நடந்துள்ளது.
மிகப்பெரிய போர்ச்சூழலில் கூட மருத்துவமனைகள், “பாதுகாக்கப்பட்ட பகுதிகள்” என்று அறிவிக்கப்படும். மருத்துவமனை வளாகத்தில் எத்தகைய தாக்குதல்களும் நடத்தக் கூடாது என்ற தார்மீக நெறிமுறைகளை எல்லாம் மீறி இத்தாக்குதல் நடந்துள்ளது. பொதுமக்களை விரட்டி விரட்டி அடித்துள்ளார்கள்.17 பேரின் உயிரிழப்புகள் கூட ஆட்சியாளர்களின் கல்மனதைக் கரைக்கவில்லை. தடியடித் தாண்டவமாடி அராஜகம் செய்துள்ளது மாவட்ட நிர்வாகம். இது பாதிக்கப்பட்டோரைப் பார்த்துப் பரிகசிக்கும் இரக்கமற்ற அரசு என்பதற்கு இப்போது இதைவிட வேறு உதாரணம் தேவையில்லை