ராணுவ வீரர் மரணம் குறித்து சமூக வலைதளத்தில் வதந்திகளை பரப்பினால் கடும் நடவடிக்கை.! கிருஷ்ணகிரி எஸ்பி எச்சரிக்கை.!
கிருஷ்ணகிரி வேலம்பட்டியில் ராணுவ வீரர் மரணத்தை அரசியல் ரீதியான கண்ணோட்டத்தில் சமூக வலைதளத்தில் வதந்திகளை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். – எஸ்பி சரோஜ் குமார் எச்சரிக்கை.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே வேலம்பட்டி எனும் ஊரில் குடிநீர் தொட்டி அருகில் துணி துவைத்ததால் ஏற்பட்ட பிரச்சனையில் அப்பகுதியை சேர்ந்த பிரபு எனும் ராணுவ வீரருக்கும் கவுன்சிலருக்கும் தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில் பிரபு உயிரிழந்துள்ளார்.
துணி துவைத்ததால் பிரச்சனை : பிரபுவின் மனைவி வேலம்பட்டி தண்ணீர் தொட்டி அருகே துணி துவைத்து கொண்டிருக்கும் போது, அங்கு வந்த கவுன்சிலர் சின்னசாமி, தண்ணீர் தொட்டி இருக்கும் இடம் என்பதால், அந்த இடத்தில் துணி துவைக்க கூடாது என்ற சத்தம் போட்டுள்ளதாக தெரிகிறது. இதனை அடுத்து, பிரபு அந்த இடத்திற்கு வந்து அதனை ஏன் என்று கேட்டுள்ளார். அப்போது கவுன்சிலர் தரப்புக்கும் பிரபுவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ராணுவ வீரர் மரணம் : இந்த வாக்குவாதம் இருதரப்பினரிடையே கைகலப்பாக மாறியது. இதில் படுகாயம் அடைந்த பிரபு ஓசூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து பிரபுவின் மனைவி காவல்துறையினரிடம் தன் கணவரை கவுன்சிலர் சின்னசாமி மற்றும் அவரது மகன்கள் சேர்த்து தாக்கியதாக புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் தான் ராணுவ வீரர் பிரபு மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துவிட்டார்.
திமுக கவுன்சிலர் கைது : இதனை அடுத்து காவல்துறையினர் அந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி, கவுன்சிலர் அவரது மகன்கள் உள்ளிட்ட ஏழு பேரை கைது செய்து உள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து அரசியல் ரீதியாக அதாவது கைது செய்யப்பட்டது திமுக கவுன்சிலர் என்பதால் சில அரசியல் கட்சிகள் இதனை அரசியல் ரீதியான பிரச்சனை போல இணையத்தில் பதிவிட்டு வந்தனர். இது குறித்து தற்போது கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எஸ்பி எச்சரிக்கை : ராணுவ வீரரின் மரணம் என்பது வேலம்பட்டியில் இரு தரப்பினர் மோதிக் கொண்டதால் ஏற்பட்டது. இதனை அரசியல் கண்ணோட்டத்துடன் சில கட்சிகள் வதந்திகளை பரப்புகின்றன. அவ்வாறு சமூக வலைதளத்தில் வதந்திகளை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். என எஸ்பி சரோஜ் குமார் எச்சரிக்கை எடுத்துள்ளார்.