#Breaking:கல்விக் கட்டணம் – மாணவர்களை தண்டித்தால் பள்ளிகள் மீது நடவடிக்கை – வெளியான அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக மாணவர்களை வகுப்பறைக்கு வெளியே அனுப்புவது அடிப்படை கல்வி உரிமையை மறுப்பதாகும் என்றும்,இது தொடர்பாக புகார் வரும் பள்ளிகள் மீது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும்,இது தொடர்பாக,அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
“மாணவர்கள் கல்விக் கட்டணத்தை செலுத்தாத காரணத்தினால், அவர்களை வகுப்பறைக்குள் அனுமதிக்காமல் வெளியில் அமர வைத்திருப்பதாக பகரி மூலம் பகிரப்பட்டுள்ளது என்றும், எந்த சூழ்நிலையிலும் இது போல கல்விக் கட்டணம் செலுத்தவில்லை என்ற ஒரே காரணத்திற்காக வகுப்பறைக்குள் அனுமதிக்காமல் அவர்களை வெளியில் அனுப்புவதும் பெற்றோர்களைத் தரக்குறைவாகப் பேசுவதும் அடிப்படைக் கல்வி உரிமையை மறுக்கின்ற செயலாகும் என்றும் தற்பொழுது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள இந்த சூழ்நிலையில் கல்வி கட்டணம் செலுத்தாத காரணத்திற்காக மாணாக்கர்கள் வகுப்பறைக்கு வெளியே அனுப்பப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மாணாக்கர்களின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு மேற்படி நிகழ்வுபோல் இனிவரும் காலங்களில் எந்தவொரு மெட்ரிகுலேசன் பள்ளியிலும் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படாதவாறு பள்ளி நிர்வாகத்திற்குத் தக்க அறிவுரைகள் வழங்கி, அதனை அவ்வப்போது பள்ளிகளில் செயல்படுத்துவதை பள்ளி ஆய்வின் போதும் பள்ளிப் பார்வையின் போதும் மாவட்ட ஆய்வு அலுவலர்கள் உறுதி செய்து கொள்ள அறிவுறுத்தலாகிறது.
மேலும், இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்ததாகப் புகார் ஏதும் பெறப்பட்டால் அதன் மீது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தனிச் கவனம் செலுத்தி உடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இது சார்ந்து அவ்வப்போது இவ்வியக்ககத்திற்கும் தவறாமல் அறிக்கை அனுப்பிடவும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் திட்டவட்டமாகத் தெரிவிக்கலாகிறது”என தெரிவிக்கப்பட்டுள்ளது.