ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை – சுகாதாரத்துறை செயலாளர்
தமிழகத்தில் ரெம்டெசிவிரை கள்ளச்சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் சென்னை, செங்கல்பட்டு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவலை தடுப்பது கடும் சவாலாக உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
18 முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கான தடுப்பூசி, உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து எப்போதும் வரும் என தெரியாது. ஆனால், அவர்களுக்கு தடுப்பூசி வரவேண்டி உள்ளது என்றும் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி ஏற்கனவே கையிருப்பில் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
1.5 கோடி தடுப்பூசிகள் ஆர்டர் கொடுத்திருந்தாலும் அவை எப்போது வந்து சேரும் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. 18 வயதானவர்களுக்கு நாளை தடுப்பூசி போடுவது சந்தேகம், பற்றாக்குறையால் திட்டமிட்டபடி 18 வயதானவர்களுக்கு தடுப்பூசி போடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என விளக்கமளித்தார்.
ஆகையால், தடுப்பூசிகள் வருகை குறித்த தகவல்கள் கிடைக்கப்பெற்ற பின்தான் தடுப்பூசி முகாம்கள் குறித்த முடிவு செய்யப்படும். மேலும் நோயாளிகளுக்கு விரைந்து அம்புலன்ஸ் அனுப்ப ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.