ரவுடிகள் மீதான அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகள்.! சென்னை முதல் கன்னியகுமரி வரை…

நேற்று ரவுடி சீசிங் ராஜா போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டதை அடுத்து, திருச்சியில் ரவுடி மீது என்கவுண்டர் நடைபெற்றது. அதே போல சென்னை, நாகர்கோயில் பகுதிகளிலும் ரவுடிகள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

TN Police Strict action against Rowdies

சென்னை : தமிழகத்தில் சட்டவிரோத குற்ற சம்பவங்களை தடுக்கும் நோக்கில் காவல்துறையினர் சமீப காலமாக தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அடுத்தடுத்த என்கவுண்டர்கள், ரவுடி சுட்டுக்கொலை செய்திகள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன.

கடந்த ஜூலை மாத தொடக்கத்தில் பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பின்னரே, காவல்துறையினரின் ‘கடும்’ நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படுள்ளன எனக் கூறப்படுகிறது. சென்னை புதிய காவல் ஆணையராக அருண் ஐபிஎஸ் பதவியேற்றபிறகு இதுவரையில் சென்னையில் மட்டும் 3 ரவுடிகள் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூலை 14இல் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி திருவேங்கடம், மாதவரம் பகுதியில் நடந்த என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். அடுத்து கடந்த செப்டம்பர் 18இல் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி, வியாசர்பாடி பகுதியில் என்கவுண்டரில் உயிரிழந்தார் .

இதனை அடுத்து நேற்று ரவுடி சீசிங் ராஜா நீலாங்கரை அருகே பக்கிங்ஹாம் கால்வாய் பகுதியில் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். முதலில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது என செய்திகள் வெளிவந்தது. ஆனால், காவல்துறையினர் அதனை முற்றிலும் மறுத்தனர். வேளச்சேரி பகுதியில் பதியப்பட்ட வேறு வழக்கில் இந்த கைது சம்பவம் நடந்ததாக விளக்கம் அளித்தனர்.

அதனை தொடர்ந்து, நேற்று, திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில், காவல்துறையால் கைதாகியிருந்த ரவுடி ஜம்போ எனும் ஜம்புகேஸ்வர் காவிரி கரை பகுதியில் தான் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை காண்பிக்க செல்கையில், போலீசை அரிவாளால் தாக்கி தப்ப முயன்றுள்ளார். அப்போது காவல்துறையினர் ஜம்போவின் இடது காலில் சுட்டுள்ளனர். திருச்சி பகுதியில் அவர் மீது 15 வழக்குகள் பதிவாகியுள்ளன.

அடுத்ததாக, இன்று சென்னையில் ரவுடி சி.டி.மணியை காவல்துறையினர் கைது செய்ய முற்படும் போது, தப்பி ஓடியதால், ரவுடி சி.டி.மணி கீழே விழுந்து, அவரது வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. தற்போது மருத்துவ சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சி.டி.மணிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இவர் கடந்த 18ம் தேதி என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி காக்கா தோப்பு பாலாஜியின் கூட்டாளி என கூறப்படுகிறது.

இன்று, கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைக் குளம் பகுதியில் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில்  தேடப்பட்டு வந்த சின்னமுட்டம் பகுதியைச் சேர்ந்த லக்ஸ் எனும் 24வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர். அவரை கைது செய்ய முற்படும்போது லக்ஸ் தப்பிச் செல்ல முயன்றதால் கீழே விழுந்து காலில் எலும்புமுறிவு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படியாக சமீப காலத்தில் ரவுடிகளின் மீதான கடுமையான நடவடிக்கைகள் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது.  மேலும் மற்ற குற்ற சம்பவ வழக்குகளில் தொடர்புடைய அனைவரது நடமாட்டத்தையும் தமிழக காவல்துறையினர் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்