வலிமை சிமெண்ட் – சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு!
தமிழில் பெயர் எழுதும்போது முன் எழுத்தையும் தமிழிலேயே எழுதும் நடைமுறை அமல்படுத்தப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு.
தமிழக அரசு சிமெண்ட் ‘வலிமை’ என்ற புதிய வணிக பெயருடன் நடப்பாண்டு முதல் வெளிச்சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் தொழில்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.
தமிழில் பெயர் எழுதும்போது முன் எழுத்தையும் தமிழிலேயே எழுதும் நடைமுறையை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றும் முன் எழுத்தை தமிழில் எழுதும் நடைமுறை பள்ளி, கல்லூரி, அரசு ஆவணங்களில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களும் பொது பயன்பாடுகளில் இம்முறையை பின்பற்ற ஊக்குவிக்கப்டும் என்றும் குறிப்பிட்டார். மேலும் தீராக்காதல் திருக்குறள் என்ற பெயரில் தீந்தமிழ் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். தீந்தமிழ் நிகழ்ச்சிகள் நடத்த ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் பேரவையில் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து, பயனற்ற பழைய சுரங்கம், குவரிகளை மக்களுக்கு பயனுள்ள அமைப்புகளாக மாற்றி தரப்படும் என்றும் எம்-சேண்ட் தயாரிப்பு தொழிலை முறைப்படுத்த ஒரு புதிய கொள்கை உருவாக்கப்படும் எனவும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
மேலும், விதிகளுக்கு புறம்பாக கனிமங்களை எடுப்பதை தடுக்க ஆளில்லா சிறியரக விமானம் பயன்படுத்தப்படும். குவாரி படுக்கையில் இருந்து வரலாற்று சின்னங்கள், பழந்தமிழர் கல்வெட்டு, சமண படுக்கை பாதுகாக்கப்படும். ஜிப்சம் கனிம இருப்பு பகுதிகளை கண்டறிய ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளார்.