அசத்தல்…2900 மெகா வாட் மின்சாரம் குறைந்த விலையில் கொள்முதல் – முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்!

Default Image

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில், தலைமைச்  செயலகத்தில் இன்று என்.எல்.சி, (16.03.2022) சோலார் எனர்ஜி கார்பரேஷன்,பவர் டிரேடிங் கார்பரேஷன் இந்தியா லிமிடெட் ஆகிய நிறுவனங்களுடன் மொத்தம் 2900 மெகா வாட் மின்சாரத்தை குறைந்த விலையில் கொள்முதல் செய்திட தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இதுதொடர்பாக,தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

1500 மெகாவாட் (MW) கையெழுத்திடல். தலபிரா மின்சக்தி கொள்முதல் ஒப்பந்தம்:

என்.எல்.சி (NLC) 3X800 மெகாவாட் (MW) திட்டத்தை ஒடிசா மாநிலம், தலபிரா (Talabira, Odissa State) என்ற இடத்தில் அமைத்திட உள்ளது.அதில் 1500 மெகாவாட் (MW) தமிழ்நாட்டிற்கு மத்திய மின் அமைச்சகத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திட்டம் தொடங்கும் ஆண்டு 2026-27 என்று திட்டமிடப்படுள்ளது. இந்த திட்டம் நிலக்கரி சுரங்கத்தின் அருகில் இருப்பதால் என்.எல்.சி (NLC) சமன் செய்யப்பட்ட மின்கட்டணமாக யூனிட் ஒன்றுக்கு ரூ.3.06 என நிர்ணயித்துள்ளது.

2026- 2027 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தின் மின் தேவையை கருத்தில் கொண்டு 1500 மெகாவாட்(MW) மின்கொள்முதல் செய்வதற்கு என்.எல்.சி (NLC) மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துடனான ஒப்பந்தம் முதல்வர் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டுள்ளது.

மேலும்,தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு தனி நிலக்கரி சுரங்கம் ஒன்று ஒதுக்கப்படும் என்றும்,கூடுதலாக 2700 மெகா வாட் மின்சாரம் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

1000 MWக்கு சோலார் எனர்ஜி கார்பரேஷன் உடன் மின் கொள்முதல் ஒப்பந்தம் கையெழுத்திடல்:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்,சோலார் எனர்ஜி கார்பரேஷன் ஆப் இந்தியாவுடன் (SECI) உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட (ISTS) திட்டத்தின் கீழ், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் புதுப்பிக்கத்தக்க மின்கொள்முதல் கொள்கையின்படி ஏற்படும் தேவையை நிறைவு செய்யும் பொருட்டு 1000 MW சூரிய சக்தியை யூனிட் ஒன்றுக்கு ரூ.2.61 என்ற விலையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வாங்குவதற்கான ஒப்பந்தம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது.

சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவிலிருந்து வாங்கப்படும் 1000 MW சூரிய சக்தி மின்சாரம் பயன்பாட்டுக்கு 2022-2023ம் ஆண்டு இறுதியில் கிடைக்கபெறும்.

400 மெகாவாட்(MW)க்கு பவர் டிரேடிங் கார்ரேஷன் இந்தியா லிமிடெட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்திடல்:

தமிழ்நாட்டின் மின் தேவையை கருத்தில் கொண்டு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், M/S பவர் டிரேடிங் கார்பரேஷன் ஆப்
இந்தியா லிமிடெட் நிறுவனத்துடன் நான்கு நடுத்தர கால மின் கொள்முதல் ஒப்பந்தங்கள் முதல்வர் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது.

இந்த ஒப்பந்தம் மூலம் 24 மணி நேரமும் 400 மெகாவாட் மின்சாரம், யூனிட் ஒன்றிக்கு ரூ.3.26 என்ற விலையில் கொள்முதல் செய்யப்படும்.இதன் ஒப்பந்த காலம் மூன்று ஆண்டுகள் ஆகும்.

என்.டி.பி.எல். 2021-2022 நிதியாண்டிற்கான இடைக்கால ஈவுத்தொகை

என்.எல்.சி. தமிழ்நாடு பவர் லிமிடெட், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் மற்றும் என்.எல்.சி.யின் கூட்டு முயற்சி நிறுவனத்தில் 2×500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. அதில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு 11 சதவீதம் பங்குகள் உள்ளது.

2021-2022 ஆம் ஆண்டில் முதல் 9 மாதங்களுக்கான ரூ.182.01 கோடி இலாபத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் பங்கு ஈவுத்தொகையான ரூ.15.16 கோடிக்கான காசோலையை  தமிழக முதல்வர் அவர்களிடம் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அவர்கள் வழங்கினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்