தமிழ்நாட்டில் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.!
புயல் எச்சரிக்கை : வங்கக் கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறிய நிலையில், புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
நேற்று மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (19.07.2024) காலை 0530 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், காலை 8.30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வழுபெற்று வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரிசா மற்றும் வட ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டி நிலவுகிறது.
இது வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை (20.07.2024) அதிகாலை ஒரிசா கடற்கரையை பூரிக்கு அருகில் கடக்க கூடும். இதனால், சென்னை, கடலூர், எண்ணூர், தூத்துக்குடி, பாம்பன், நாகை, காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும், சீற்றம் அதிகமாக உள்ளதால் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ள மீனவர்கள் பத்திரமாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை :
தமிழக கடலோரப்பகுதிகள்: இன்று (19.07.2024) வளைகுடா, தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகள்: இன்று (19.07.2024) வடக்கு, மத்திய வங்கக்கடல் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதிகள், ஆந்திர கடலோர பகுதிகள், வடக்கு அந்தமான் கடல்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.