புயல் நிவாரண நிதி – தனது ஒருமாத ஊதியத்தை வழங்கிய முதல்வர்..!

mk stalin

மிக்ஜாம் புயல் பேரிடர் பாதிப்பிலிருந்து மீள முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு முதல்வர் மு..ஸ்டாலின் தனது ஒரு  மாத ஊதியத்தை வழங்குவதாகவும்,  அனைத்து சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்களும் நிதி அளித்திடுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், மிக்ஜாம் புயலால் கடந்த டிசம்பர் 2 முதல் 4-ஆம் தேதி வரை சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த மழை என்பது, 47 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத அளவிலான பெருமழை, இந்த இயற்கைப் பேரிடரால் ஏறத்தாழ 1 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்தப் பேரிடர் சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களுக்கு ஏற்பட்டுள்ள பேரிடர் மட்டுமல்ல. ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்குமே ஏற்பட்டுள்ள பேரிடர்.

மழைநீர் வடிகால் பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுத்தி இருந்ததால்தான் பேரழிவு தவிர்க்கப்பட்டது. அதேபோல் அனைத்துத் துறைகளும் பேரிடரை எதிர்கொள்ள தயார் நிலையில் இருந்ததும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வைத்திருந்ததும் இணைந்து மக்களைக் காத்துள்ளது. இருப்பினும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முழுவீச்சில் நடைபெற்ற மீட்புப் பணிகளின் காரணமாக மூன்று நாட்களுக்குள் பெரும்பாலான இடங்கள் மீட்கப்பட்டு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி உள்ளது. குறிப்பிட்ட சில பகுதிகளில் மீட்புப் பணி நடந்து வருகிறது. இத்தகைய அசாதாரண நேரத்தில் அனைத்துத் தரப்பும் மக்களுக்கு உறுதுணையாக நிற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இந்தப் பேரிடர் பாதிப்பிலிருந்து மக்கள் மீள்வதற்கு உதவியாக நல்லுள்ளங்கள் பலர் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தங்களுடைய பங்களிப்பை வழங்குகின்றனர். அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இந்த இயற்கைப் பேரிடரிலிருந்து மீள்வதற்கான கூடுதல் நிதி ஆதாரங்களைத் திரட்ட வேண்டியது அவசியமாகிறது.

எனவே, அரசின் முனைப்பான முயற்சிகளுக்கு நமது சமுதாயத்தின்
ஒவ்வொரு பிரிவினரும் தங்களால் இயன்ற வகையில் உதவி செய்ய வேண்டியது
அவசியம். இச்சூழலில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி
வழங்கிட வேண்டுமென்று உங்கள் அனைவருக்கும் வேண்டுகோள்
விடுக்கின்றேன்.

அதன் தொடக்கமாக என்னுடைய ஒரு மாத கால ஊதியத்தை
முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்குகிறேன். தமிழ்நாட்டில் உள்ள
அனைத்துச் சட்டமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களும் தங்களுடைய ஒரு மாத கால ஊதியத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கிடுமாறு கேட்டு கொள்கிறேன்.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்