முழுமையாக கரையை கடந்த புயல்.. வட தமிழகத்தில் மழை தொடரும் – வானிலை ஆய்வு மையம்!
வங்கக்கடலில் உருவான நிவர் புயல், அதிதீவிர புயலாக கரையை கடந்து அதன்பின் தீவிர புயலாக வலுவிழந்து, புதுச்சேரியில் இரவு 2.30 மணியளவில் முழுமையாக கரையை கடந்தது.
வங்கக்கடலில் உருவான நிவர் புயல், அதி தீவிரப்புயலாக வலுப்பெற்று, புதுச்சேரி அருகே நேற்று இரவு 11:30 முதல் இன்று நள்ளிரவு 2:30 மணிக்கு இடையில் கரையை கடந்தது. அதன்பின் தீவிர புயலாக வலுவிழந்து, புதுச்சேரி அருகே முழுமையாக கரையை கடந்து, வடக்கு – வடகிழக்கு திசையில் நகர்ந்தது. மேலும் 6 மணிநேரத்திற்கு பின் புயலாக வலுவிழக்கும். இதன் காரணமாக வட தமிழகத்தில் மழை தொடரும் எனவும், காற்று சற்று வேகமாக வீசக்கூடும் என்று சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்த நிவர் புயலின் தாக்கம் காரணமாக புதுச்சேரி, கடலூர், சென்னை ஆகிய இடங்களில் பலத்த காற்றுடன், இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்ததாகவும், செல்போன் கோபுரங்கள் சரிந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. இரவு நேரம் என்பதால், இந்த புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து காலை தான் தெரியவரும். இந்த புயலின் தாக்கம் குறைந்துள்ள காரணத்தினால், படிப்படியாக மழையும் குறைந்துள்ளது. ஆனால் வட தமிழகத்தில் மழை முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.