இந்துமத எதிர்ப்பை நிறுத்துங்கள்.. இல்லையெனில் திமுக ஆட்சி டிஸ்மிஸ் தான் – சுப்பிரமணியன் சுவாமி எச்சரிக்கை

Subramanian Swamy

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த பேச்சுக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகிறது. டெங்கு, மலேரியா போன்று சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி பேசியது இந்திய அளவில் சர்ச்சையாகி உள்ளது. அமைச்சர் உதயநிதியின் பேச்சுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்ட மூத்த பாஜக தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் என பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

அதுமட்டுமில்லாமல், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 262 பேர் கடிதம் எழுதியுள்ளனர். இதனால், பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், சனாதனம் குறித்த உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு, எச்சரிக்கை விடுக்கும் வகையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், தற்கொலை செய்யும் நிலையில் திமுக?, சனாதன தர்மத்தின் மீதான தாக்குதல் முட்டாள் தனமானது. இன்னொரு முறை சனாதனம் தர்மத்தை நிராகரிக்கும் வகையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினால், தமிழ்நாடு அரசின் ஆட்சியை டிஸ்மிஸ் செய்யும் வேளைகளில் இறங்குவேன். எனவே, இந்த வெறித்தனமான இந்துமத எதிர்ப்பை நிறுத்துங்கள், இல்லையெனில் ஆட்சியை கலைக்க பாடுபடுவேன் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

என்னால் ஆட்சியை கலைக்க முடியும் என்பதை 1991ல் நிரூபித்துள்ளேன். இந்தியா ஒரு கூட்டமைப்பு என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். மேலும்,  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்