தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டம்!10,000க்கும் அதிகமான கடைககள் அடைப்பு!2000 மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை!
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நாட்டுப்படகு மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.மேலும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.இதேபோல் தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் 10,000க்கும் அதிகமான கடைகளை அடைத்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் தூத்துக்குடியில் 144-ன் கீழ், தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம் மற்றும் சிப்காட் காவல் நிலைய எல்கைகளுக்கு உட்பட்ட பகுதிகள் முழுவதற்கும் தடை உத்தரவு என்று கலெக்டர் அறிவித்துள்ளார்.
இது குறித்து நேற்று கலெக்டர் வெங்கடேஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு, பல்வேறு அரசியல் கட்சிகள், வணிகர் சங்கம் மற்றும் மீனவர் சங்கம் சார்பாக 22.05.2018 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவித்துள்ளதால் சட்டம் மற்றும் ஒழுங்கினை பராமரித்திட 21.05.2018 இரவு 10.00 மணி முதல் 23.05.2018 காலை 08.00 மணி வரை குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 144-ன் கீழ், தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம் மற்றும் சிப்காட் காவல் நிலைய எல்கைகளுக்கு உட்பட்ட பகுதிகள் முழுவதற்கும் தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி ஐந்து மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கும், ஊர்வலம் செல்வதற்கும், பொதுக் கூட்டம் நடத்துவதற்கும், சைக்கிள், இருசக்கரவாகனம், நான்கு சக்கரவாகனம் மூலம் பேரணியாக, வாள், கத்தி, கம்பு, கற்கள், அரசியல் மற்றும் சாதி கொடிக் கம்புகள் மற்றும் இதர அபாயகரமான ஆட்சேபகரமான ஆயுதங்கள் கொண்டு வருவதற்கும், தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து அனைத்து வகை வாடகை வாகனங்கள் மூலமாகவும் ஆர்ப்பாட்டத்திற்கு கலந்து கொள்ள பொதுமக்களை; அழைத்து வருவதற்கும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144-ன் கீழ் தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தடை உத்தரவிலிருந்து பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள், தினசரி வாகனங்கள், அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள், சுற்றுலாவிற்காக வரும் வாகனங்கள், சரக்கு வாகனங்கள் தினசரி செல்லும் ஆம்னி பேருந்துகள் ஆகியவற்றிற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தடையுத்தரவு திருமணம் மற்றும் இறுதி சடங்கு ஊர்வலங்களுக்கும், காவல்துறை அனுமதி பெற்ற இனங்களுக்கும் பொருந்தாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.