#BREAKING: கோவில்பட்டியில் கி.ரா.வுக்கு சிலை.., மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!
மறைந்த எழுத்தாளர் கி.ரா.வுக்கு தமிழக அரசின் சார்பில் சிலை அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த இடைச்செவல் கிராமத்தை சார்ந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன் கரிசல் இலக்கியத்தின் தந்தை என போற்றப்படுபவர். ‘கோபல்லபுரத்து கிராமம்’ நாவலுக்காக இவருக்கு சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டது.
வயது முதிர்வின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு நேற்று நள்ளிரவு கி.ராஜநாராயணன் காலமானார். இவரின் மறைவிற்கு பல அரசியல் தலைவர்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மறைந்த எழுத்தாளர் கி.ராவுக்கு கோவில்பட்டியில் சிலை அமைக்கப்படும் எனவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் இலக்கியத்திற்குச் செழுமை சேர்த்த கரிசல்காட்டு எழுத்தாளர் கி.ராஜநாராயணன் (கி.ரா.) அவர்கள் ஏட்டறிவைக் காட்டிலும் பட்டறிவால் பல இலக்கியப் படைப்புகளைத் தந்தவர்; வட்டார வழக்கு சார்ந்த இலக்கியப் படைப்புகளுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர்.
மறைந்த எழுத்தாளர் கி.ரா. அவர்கள் படித்த இடைசெவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை அரசு சார்பில் பழமை மாறாமல் புதுப்பிக்கவும், அவரது நினைவினைப் போற்றும் வகையிலும் அவரது படைப்பாளுமையை வெளிப்படுத்தும் வகையிலும் அவருடைய புகைப்படங்கள் படைப்புகள் ஆகியவற்றை மாணவர்களும் பொது மக்களும் அறிந்துகொள்ளும் வகையில் ஓர் அரங்கம் நிறுவப்படும்.
கரிசல் இலக்கியத்தை உலகறியச் செய்த பிதாமகர் கி.ரா. அவர்களுக்கு கோவில்பட்டியில் அரசு சார்பில் சிலை அமைக்கப்படும் எனவும் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவிக்கபப்ட்டுள்ளது. கி.ரா.வுக்கு நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.