அமலாக்கத்துறைக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!
செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் விளக்கமளிக்க அமலாக்கத்துறைக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்.
அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி அளித்த புகாரின் பேரில், அமலாக்கத்துறை இணை இயக்குனருக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டபோது மனித உரிமை மீறல் நடைபெற்றதாக அவரது மனைவி மேகலா புகார் அளித்திருந்தார்.
அதாவது, கைது செய்யப்பட்டபோது சட்ட விதிமுறைகளை அமலாக்கத்துறை பின்பற்றாமல் துன்புறுத்தியதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை பதிலளிக்க மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதன்படி, அமலாக்கத்துறை சென்னை மண்டல இணை இயக்குனர் 6 வாரத்தில் விளக்கமளிக்கமாறு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். நாளை அதிகாலை செந்தில் பாலாஜிக்கு காவேரி மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை செய்ய வாய்ப்பு இருப்பதாக மருத்துவத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.