ஸ்டிக்கர்களை கிழித்ததால் 600 பேர் கையில் அழியாத மையால் முத்திரை அதிகாரிகள் அதிரடி.!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து பலர் அவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர்.
இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூரைச் சேர்ந்த பலர் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வந்துள்ளனர்.அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தினர். அவர்களுக்கு கொரோனா வைரஸ் இல்லை என்றாலும் சில நாட்கள் தனிமைப்படுத்தி இருக்க வேண்டும் என அதிகாரிகள் கூறினர்.
இதனால் அவர்கள் வீடுகளின் முன் தனிமைப் படுத்தப்பட்டவர்கள் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. ஆனால் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வீடுகளில் பலர் ஸ்டிக்கர்களை கிழித்து விட்டதாக புகார்கள் எழுந்த நிலையில் இதனையடுத்து நேற்று நகராட்சி அதிகாரிகள் சிலர் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வந்த நபர்களின் வீடுகளுக்கு சென்று அவர்களது இடது கையில் அழியாத மையால் முத்திரையிட்டனர்.
இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், வெளிநாடுகளிலிருந்து 348 பேர், வெளிமாநிலங்களிலிருந்து 252 பேர் என 600 பேர் கடையநல்லூருக்கு வந்துள்ளனர்.இவர்களின் வீட்டில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.
ஆனால் அவர்கள் ஸ்டிக்கரை கிழித்து விட்டு வெளியே வருவதாக புகார் வந்தது அதனால் அவர்களது இடது கையில் அழியாத மையால் முத்திரை குத்தப்பட்டது. இதையும் மீறி வெளியே வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.