திமுக ஆட்சியில் கல்வி, விவசாய கடன்கள் தள்ளுபடி – மாணவியின் கேள்விக்கு ஸ்டாலின் வாக்குறுதி.!
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கல்வி கடன், விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று வேலூர் தேர்தல் பிரசாரத்தில் முக ஸ்டாலின் உறுதி அளித்தார்.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே இருக்கும் நிலையில், பிரதான கட்சிகளான திமுகவும், அதிமுகவும் ஒவ்வொரு பக்கம் அனல் பறக்க பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றன. அந்தவகையில், திமுக தலைவர் முக ஸ்டாலின், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தேர்தல் பிரச்சாரத்தை நேற்று முதல் தொடங்கி நடத்தி வருகிறார்.
இந்நிலையில், இன்று வேலூரில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது மக்களிடம் இருந்து புகார்கள் வாங்கப்பட்டு, அதனை புகார் பெட்டில் சேகரித்து வைத்தபின், அதில் இருந்து ஒருவரை தேர்வு செய்து, கூட்டத்தின் மத்தியில் புகார்களை கேட்டறிந்தார். அதில் மாணவி ஒருவர் ஸ்டாலினிடம், நீங்கள் 2016-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தால், கல்வி கடனை தள்ளுபடி செய்வதாக அறிவிக்கப்பட்டது.
கல்வி கடனால் மிகவும் கஷ்டமாக இருக்கிறது. என் மேற்படிக்குக்கு தேவைப்படும் அத்தியாவசியமான தேவைகளை பூர்த்தி செய்ய முடியவில்லை. அதிமுக வெற்றி பெற்று கடந்த 10 ஆண்டுகளாக கல்வி கடனை குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. இப்ப இருப்பது ஒரே நம்பிக்கை உங்கள் மீது தான். நீங்கள் ஆட்சிக்கு வந்ததும் கல்வி கடனை தள்ளுபடி செய்தால், எங்களை போல ஏழை மாணவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று பெண் ஒருவர் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த ஸ்டாலின், மாணவர்களின் கல்வி கடன் மட்டுமல்ல விவசாய கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்று நாங்கள் அறிவித்திருக்கிறோம். ஆனால், மத்தியில் நம்ம ஆட்சி வரமுடியாததால் கல்வி கடன் குறித்து ஏதும் செய்ய முடியவில்லை. ஆகையால், கவலைபடாதிங்கள் கண்டிப்பாக கல்வி கடன், விவசாய கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்று உறுதியளித்தார். மேலும், திமுக ஆட்சிக்கு வந்தால் முழுமையாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். 100 நாட்களில் குறைகளை தீர்க்க தனி துறை ஏற்படுத்தப்படும் என்று குறிப்பிட்டார்.