ஆள் இல்லாத கடையில் டீ ஆற்றுவது போல, ஸ்டாலின் 37 கட்சித் தலைவர்களுக்கு கடிதம் – ஈபிஎஸ் விமர்சனம்!

Default Image

சமூக நீதி கூட்டமைப்பு என்ற பெயரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது திறமையின்மையை மறைக்கப் பார்க்கிறாரா? என்று திர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை.

அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்பு என்ற அமைப்பில் இணையுமாறு சோனியாகாந்தி, சரத் பவார், லாலு பிரசாத், பவன் கல்யாண், ஓவைசி, சந்திரபாபு நாயுடு, ஓபிஎஸ் உள்பட நாட்டில் உள்ள 37 அரசியல் கட்சி தலைவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று கடிதம் மூலம் அழைப்பு விடுத்திருந்தார். சமத்துவம், சமூகநீதி, சுயமரியாதையின் நம்பிக்கை கொண்ட அனைவரும் இணைந்ததால் எதிர்த்து போராட முடியும். இது அரசியல் ஆதாயம் பற்றியதல்ல, அடையாளத்தை மீண்டும் நிலைநிறுத்துவது பற்றியாகும். கூட்டமைப்பின் பிரதிநிதிகளாக தக்க நபர்களை நியமிக்குமாறு கட்சிகளின் தலைவர்களுக்கு கேட்டுக்கொண்டார்.

இந்தியாவின் சமூகநீதி கருத்தியலை முன்னெடுத்து செல்ல அனைத்திந்திய சமூகநீதி கூட்டமைப்பு முயற்சி செய்யும் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டியிருந்தார். இந்த நிலையில், சமூக நீதி கூட்டமைப்பு என்ற பெயரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது திறமையின்மையை மறைக்கப் பார்க்கிறாரா? என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், தமிழகத்தில் கடந்த 9 மாதங்களாக அலங்கோல ஆட்சி நடத்தி வரும் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அவர்கள் தன்னுடைய ஆட்சி ரீதியான தொடர் தோல்விகளை மறைக்க, சமூக நீதி கூட்டமைப்பு என்ற போர்வைக்குள் நுழைந்திருக்கிறார். அகில இந்திய அளவிலும், குறிப்பாக நம் தாய்த் திருநாடான தமிழகத்திலும் சமூக நீதிக்கு இப்போது என்ன பாதிப்பு வந்துள்ளது என்று யாருக்கும் புரியவில்லை.

தமிழ் நாட்டைப் பொறுத்தவரை, சமூக நீதிக்கு ஏதாவது பங்கம் ஏற்பட்டது என்றால் அதற்கு மூலக் காரணம் திமுக-வாகத் தான் இருக்கும் என்பதைத் தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். சமுக நீதிக்காக ஒரு துரும்பையும் கிள்ளிப் போடாத இன்றைய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இந்தியா முழுமைக்குமான சமூக நீதிக் கூட்டமைப்பு என்ற ஒன்றை ஆரம்பித்து, 37 தலைவர்களுக்கு கடிதம் அனுப்பியதன் உள்நோக்கம் என்ன?.

இந்தியாவில் அடுத்த பொதுத் தேர்தல் 2024ல் தான் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாகவே பல மாநிலக் கட்சிகளின் தலைவர்களுக்கு, தாங்கள் பிரதமராக வேண்டும் என்ற எண்ணம் வந்துள்ளது. எனவே, ஸ்டாலின் அவர்களும் அதே எண்ணத்தில் சமூக நீதிக் கூட்டமைப்பு என்ற போர்வையில் கடிதம் எழுதி இருக்கிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. இந்தக் கூட்டமைப்பு குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலோ, விளம்பரங்களிலோ, கடிதத்திலோ எந்தெந்த விதத்தில் சமூக நீதி பறிக்கப்பட்டது.

எந்தெந்த விதத்தில் தமிழக மக்களுக்கு சமூக நீதி கிடைக்கவில்லை என்றெல்லாம் விளக்காமல், தற்போதைய மத்திய அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளிலும் கிடைத்துள்ள 27 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு தான்தான் காரணம் என்று மார் தட்டுகிறார். இந்தக் கூட்டமைப்பு குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலோ, விளம்பரங்களிலோ, கடிதத்திலோ எந்தெந்த விதத்தில் சமூக நீதி பறிக்கப்பட்டது. நீட் தேர்வு விலக்கு தொடர்பாக 7 மாநில முதல்வர்களுக்கு மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். யாராவது பதில் கடிதம் எழுதியுள்ளனரா ? அப்படி இருந்தால் வெளியிட முடியுமா ? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்றைக்குக்கூட, பல மாநிலக் கட்சித் தலைவர்கள் இந்தப் பிரச்சனையில் ஸ்டாலின் அவர்கள் எழுதிய கடிதத்தின் பொருள் புரியவில்லை என்று கூறுவதாகத் தகவல்கள் வருகின்றன. ஆள் இல்லாத கடையில் டீ ஆற்றுவது போல, ஸ்டாலின் அவர்கள் 37 கட்சித் தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். தன்னுடைய 9 மாத கால ஆட்சியின் ஊழல்கள், முறைகேடுகள், கரப்ஷன், கமிஷன், கலெக்ஷன், அராஜகம், அத்து மீறல், காவல் துறையினர் உட்பட அனைத்துத் துறையினருக்கும் பாதுகாப்பின்மை, கொலை கொள்ளை, பாலியல் துன்புறுத்தல்கள் போன்ற சட்டவிரோத, சமூக விரோதச் செயல்கள் போன்றவற்றைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

மக்களிடத்தில் கடந்த 9 மாத கால திமுக அரசின் தோல்வியை மறைக்க, சமூக நீதிக் கூட்டமைப்பு என்ற பெயரில் காகிதப் பூ நாடகம் ஆடுவதை நிறுத்திவிட்டு, தமிழகத்தின் முன்னேற்றத்திற்காகவும், தமிழக மக்களின் நலனுக்காகவும், முடிந்தால் எதையாவது செய்யும்படி ஸ்டாலின் அவர்களை வற்புறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்