சர்வாதிகார ஆட்சி நடத்துகிறார் ஸ்டாலின் – அண்ணாமலை
குற்றவாளிகளை கைது செய்யாமல், எதிர்த்து குரல் கொடுப்பவர்களை கைது செய்வது தான் திராவிட மாடல் ஆட்சி என அண்ணாமலை பேச்சு.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாஜக சார்பில் பிரதமர் மோடி பிறந்த நாள் பொதுக் கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் இருள் சூழ்ந்தது போல் திமுக சூழ்ந்துள்ளது. தமிழகத்தில் பெட்டி கடைகளில் கூட கஞ்சா விற்பனை ஜோராக நடக்கிறது. ஆனால் கஞ்சா விற்பனை செய்பவர்களை கைது செய்யாமல், தன்னை எதிர்த்து குரல் கொடுப்பவர்களை ஸ்டாலின் கைது செய்கிறார்.
ஆ.ராசா இந்து தாய்மார்களை கொச்சப்படுத்தியுள்ளார். பாஜகவின் கடைசி தொண்டன் இருக்கும் வரை ஆ.ராசாவின் பேச்சு குறித்து கேள்வி எழுப்புவோம். குற்றவாளிகளை கைது செய்யாமல், எதிர்த்து குரல் கொடுப்பவர்களை கைது செய்வது தான் திராவிட மாடல் ஆட்சி. முதல்வர் மு.க.ஸ்டாலின் சர்வாதிகார ஆட்சி நடத்துகிறார் என விமர்சித்துள்ளார்.
தவறை தட்டிக் கேட்டால் குற்றம் என்றால், தொடர்ந்து செய்து கொண்டே இருப்போம். தமிழகத்தில் இனி அதிரடி அரசியல் இருக்கும் எனப் பேசிய அவர், மின் கட்டணத்தை 50 சதவீதம் குறைப்பேன் என்று சொல்லி வாக்கு வாங்கிவிட்டு 54 சதவீதம் உயர்த்தி விட்டனர். பால் விலையை 3 முறை உயர்த்தி உள்ளனர். எதற்கெடுத்தாலும் மோடியை காரணம் காட்டுகின்றனர். அவர் எப்போது ? உயர்த்த சொன்னார் சொல்லுங்கள் என தெரிவித்துள்ளார்.