‘வீறுகொண்ட வீரர்களாக குரல் கொடுத்தனர்’.. திமுக எம்.பி.க்களுக்கு ஸ்டாலின் பாராட்டு.!

நாடாளுமன்ற கூட்டத் தொடரில் வீறுகொண்ட வீரர்களாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடளுமன்ற உறுப்பினர்கள் முழங்கி இருக்கிறார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் கூறிஉள்ளார்.

MK stalin

சென்னை: இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் கடந்த நவம்பர் 25-ஆம் தேதி தொடங்கி, நேற்றைய தினம் முடிவடைந்தது. இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டு மக்களின் குரலை வீறுகொண்ட வீரர்களாக மக்களவையில் திமுக எம்.பிக்கள் முழங்கியதாக முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.

இக்கூட்டத் தொடரில் வீறுகொண்ட வீரர்களாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடளுமன்ற உறுப்பினர்கள் முழங்கி இருக்கிறார்கள். தமிழ்நாட்டின் நலனுக்காக குரல் கொடுத்து, மாநில உரிமைகள் தொடர்பான பிரச்னைகளை எழுப்பி கவனத்தை ஈர்த்த திமுக எம்.பிக்களின் செயல்பாடுகளைப் பார்த்து, நாடே வியந்து கொண்டிருப்பதாகவும் புகழ்ந்துள்ளார்.

மேலும், மற்ற மாநில எம்.பிக்களுக்கு முன்னோடிகளாக அவர்கள் செயல்படுவதைப் பார்த்து தான் மகிழ்வதாகவும் கூறியுள்ளார். இது தொடர்பான அறிக்கையில் முதலவர் ஸ்டாலின், “இரயில்வே திட்டங்கள், மெட்ரோ ரயில் திட்ட நிதி ஒதுக்கீடு, சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ்தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல் இருப்பது, விவசாயிகள் கடன் தள்ளுபடி கோரிக்கை இப்படி எண்ணற்ற திட்டங்களை, தமிழ்நாட்டின் உரிமைகளை, எந்த மாநில எம்.பி.க்களைக் காட்டிலும், தமிழ்நாட்டு மக்கள் தேர்ந்தெடுத்து அனுப்பிய கழக எம்.பி.க்கள் எழுப்பியது எழுச்சியூட்டியது.

“ஒரே நாடு ஒரே தேர்தலை” கடுமையாக எதிர்த்துப் பேசிய தி.மு.க. மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு – “மதுரை டங்ஸ்டன் கனிம சுரங்க அனுமதியை ரத்து செய்யுங்கள்” என்றும் “பேரிடர் மேலாண்மை 2024 திருத்தச் சட்டத்தை எதிர்த்தும்” அனல் பறக்கப் பேசிய தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் தங்கை கனிமொழி கருணாநிதி.

“அவைக்குப் பிரதமரே வருவதில்லை” என்று முழங்கிய திருச்சி சிவா அரசியல் சட்டத்தின் 75 ஆவது ஆண்டில், “அரசியலமைப்புச் சட்டத்தின் ஆறு கட்டமைப்புக் கூறுகளும்,  கேசவானந்த பாரதி வழக்கும்” என அரசியல்சட்ட நுணுக்கம் நிறைந்த ஆ.இராசா – மாநில உரிமைகளைப் பற்றியும், மதவாத அரசியல் அச்சுறுத்தல் குறித்தும் உரையாற்றிய ஜெகத்ரட்சகன்,  “வானிலை அறிவிப்பு தொழில்நுட்பத்தை மேம்படுத்துக” என தயாநிதி மாறன் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் ஒன்றிய அரசைத் தட்டி எழுப்பினார்கள்.

ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டின் குரலாகக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டிய பிரச்சினைகள் எழுப்பிய மாநில உரிமை முழக்கங்கள் ஜனநாயகத்தைப் பாழ்படுத்தும் “ஒரே நாடு ஒரே தேர்தலை” ஆணித்தரமாக எதிர்த்த நாடாளுமன்றக் குரல்கள் எல்லாம் பிரதமர் மோடி அவர்கள் தலைமையிலான ஒன்றிய அரசின் செவிகளில் உரக்கவே விழுந்திருக்கும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்