“தமிழகத்தின் உரிமைகளை கோட்டை விட்டு நாடகம் நடத்தி வருகிறார் ஸ்டாலின்” – அண்ணாமலை குற்றச்சாட்டு!
மக்களவை தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் நடைபெறும் நிலையில், அதை பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கடுமையாக சாடியுள்ளார்.

சென்னை : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக அரசு நடத்தும் தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தை “ஒரு நாடகம்” என்று விமர்சித்து, அதற்கு எதிராக கறுப்புக்கொடி போராட்டத்தை நடத்தினார். தமிழகத்தில் கொலைகள், ஊழலை மறைக்கவே மறுசீரமைப்பு எனும் மெகா நாடகம் என்ற பதாகையை ஏந்தி சென்னை, பனையூரில் உள்ள தனது இல்லத்தின் வெளியே அண்ணாமலை போராட்டம் நடத்தியுள்ளார். மேலும், தமிழிசையும் தனது இல்லத்தின் முன் போராட்டம் நடத்தினார்.
இந்நிலையில், வீட்டில் இருந்தபடி கருப்புச்சட்டை அணிந்து கருப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்துவது ஏன்? என்று கேட்டதற்கு, பதிலளித்த அண்ணாமலை, “தமிழ்நாட்டில் கர்நாடகா, கேரள மாநில தலைவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிப்பதை கண்டித்து பாஜக சார்பில், இந்த கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
தமிழகத்தில் நிலவும் பிரச்னைகளான ஊழல், படுகொலைகள், பாலியல் குற்றங்கள் மற்றும் அரசின் தோல்விகளை மறைப்பதற்காகவே இந்த தொகுதி மறுசீரமைப்பு ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுவதாக குற்றம்சாட்டினார். ‘டாஸ்மாக் ஊழல் நாட்டையே உலுக்கும், மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ஸ்டாலின் ஏன் மறுக்கிறார் எனவும் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், “தமிழ்நாட்டு பிரச்னைகளை மறைக்க, தொகுதி மறுவரையறை கூட்டம் என்ற பெயரில் திமுக நாடகம் நடத்துகிறது. 4 ஆண்டுகளாக மாநில உரிமைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோட்டைவிட்டுள்ளார். அண்டை மாநிலங்களுடன் உள்ள பிரச்சனைகளை தவிர்த்து கூட்டுக் குழு கூட்டம் நடத்துகிறார். முல்லைப்பெரியாறு, மேகதாது பிரச்சினை குறித்து இன்றைய கூட்டத்தில் முதல்வர் பேச வேண்டும்.
தொகுதி மறுவரையறை தொடர்பாக பிரச்சினை இருப்பதாக கற்பனை செய்து கொண்டு நீங்கள் நடத்தும் நாடகம் தொடரட்டும். அதோடு கூட்டத்துக்கு வந்துள்ள அண்டை மாநில முதல்வர்களுடன் தமிழக உரிமைகள் பற்றியும் பேசுங்கள்” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சாடியுள்ளார்.