மருத்துவருக்கு கத்திக்குத்து : அரசு மருத்துவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிப்பு!
சென்னையில் அரசு மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து அரசு மருத்துவ சங்கம் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது.
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனையில் பணியாற்றி வரும் புற்றுநோய் மருத்துவர் பாலாஜியை இன்று காலை நோயாளியுடன் வந்த விக்னேஷ் என்னும் வடமாநில இளைஞர் கத்தியால் குத்தியுள்ளார். இது தொடர்பாக, இரு வடமாநில இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவத்தை கண்டித்து பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், இந்த சம்பவத்தின் எதிரொலியாக காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அரசு மருத்துவர் சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக, தமிழக அரசு மருத்துவர்கள் சங்க மாநிலத் தலைவர் செந்தில் கூறுகையில், “தமிழகத்தில் உடனடியாக மருத்துவமனைகளில் அனைத்து பணிகளும் நிறுத்தப்படும்.
அதனைத் தொடர்ந்து, கல்லூரியில் மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கான வகுப்புகள் நிறுத்தப்படும். மேலும், மாணவர்களையும் இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளோம். அதன்பின், தனியார் மருத்துவர்களும் இந்த போராட்டத்தில் இணைந்து இந்த சம்பவத்திற்கு ஒரு தீரவு வரும் வரை போராட்டம் நடத்தவுள்ளோம்.
இது குறித்த விவாதம் எடுக்கப்பட்டு இன்று மாலை தீர்மானிக்கப்படும். மேலும், உயிர்காக்கும் சிகிச்சை, எமர்ஜென்சி சிகிச்சை மட்டும் எந்த ஒரு தடங்களுமின்றி அதற்கென தனி மருத்துவர்களை நியமித்து நாங்கள் பாப்போம். மற்றபடி அனைத்து விதமான வேலைகளும் நிறுத்தப்படவுள்ளது.
பல முறை மருத்துவர்களின் பாதுகாப்பது குறித்து பேசியிருக்கிறோம், ஆனால் இந்த சம்பவத்திற்கு பிறகு மருத்துவர்களின் பாதுகாப்புக்கு ஒரு முழு தீர்மானம் எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம்”, என தமிழக அரசு மருத்துவர்கள் சங்க மாநிலத் தலைவர் செந்தில் கூறியுள்ளார். மருத்துவர்கள் வேலை நிறுத்தம் செய்த இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.