800 பேரின் உயிரை காப்பாற்றிய ஸ்ரீவைகுண்டம் ஸ்டேஷன் மாஸ்டருக்கு மத்திய அரசு விருது!
தூத்துக்குடி மழை வெள்ளத்தின் போது செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலை உரிய நேரத்தில் தடுத்து நிறுத்தி 800 பயணிகளின் உயிரை காப்பாற்றிய ஸ்ரீவைகுண்டம் ஸ்டேஷன் மாஸ்டருக்கு மத்திய அரசு விருது அறிவித்துள்ளது.
சென்னை : ஒவ்வொரு ஆண்டும் ரயில்வே துறை சார்பில் சிறந்த ரயில்வே ஊழியரின் சேவையை அங்கீகரிக்கும் விதமாக ரயில் சேவா புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த விருதானது ஆண்டுதோறும் ரயில்வே வார விருது வழங்கும் விழாவில் வழங்கப்பட்டு வருகிறது.
அதேபோல், 69வது ரயில்வே வார விருது வழங்கும் விழாவானது டெல்லியில் வரும் டிசம்பர் 21-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விருது விழாவில் ‘ரயில் சேவா புரஸ்கார் 2024 (Rail Seva Puraskar) ‘ வாங்கும் நபரின் பெயர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களின் கனமழையால் பல்வேறு பகுதிகள் வெள்ள நீரால் பாதிக்கப்பட்டன. அப்போது டிசம்பர் 17, 2023 அன்று 800 பேருடன் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலானது ஸ்ரீவைகுண்டம் நோக்கி வந்து கொண்டிருந்தது. வெள்ளத்தின் தண்டவாளங்கள் மூழ்கியதை அறிந்த ஸ்ரீவைகுண்டம் ஸ்டேஷன் மாஸ்டர் ஜாபர் அலி, தக்க நேரத்தில் ரயிலை நிறுத்தினார். இதனால் பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது. அதில் பயணித்த 800 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதில் முதல்கட்டமாக 300 பயணிகளும், அதன் பிறகு 500 பயணிகளும் மீட்கப்பட்டிருந்தனர்.
வெள்ளத்தில் சிக்கி பெரும் ரயில்வே விபத்து ஏற்படப்போவதை முன்பே அறிந்த ஜாபர் அலி, சரியான நேரத்தில் ரயிலை தடுத்து 800 பேரின் உயிரை காப்பாற்றிய நற்செயலுக்காக ரயில் சேவா புரஸ்கார் விருது அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 16, 1853ஆம் ஆண்டு முதல் பயணிகள் ரயில் இந்தியாவின் இயக்கப்பட்டு வருகிறது. இதனை நினைவுகூறும் வகையில் ரயில்வே வார விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. ரயில்வேயில் சிறப்பாக பணியாற்றும் ஊழியர்களை கௌரவிக்கும் விதமாக இந்த விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.