ஈரோடு கிழக்கு : தேர்தல் நடத்தும் அதிகாரி ‘திடீர்’ மாற்றம்! காரணம் இதுவா?
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நடத்தும் அதிகாரியாக ஓசூர் மாநகராட்சி ஆணையர் ஸ்ரீகாந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை நடத்தும் அதிகாரியாக ஈரோடு ஆணையர் மணீஷை நியமனம் செய்திருந்தந்து தேர்தல் ஆணையம். ஆனால் தற்போது அவரை திடீரென மாற்றம் செய்துள்ளது.
தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நடத்தும் அதிகாரியாக ஓசூர் மாநகராட்சி ஆணையர் ஸ்ரீகாந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுக்கள் பரிசீலனையில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக இந்த மாற்றம் நிகழ்ந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இறுதி நாள் (ஜனவரி 17) வரையில் 58 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். ஜனவரி 18இல் வேட்புமனு பரிசீலனை நடைப்பெற்று, அதில் 3 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. பின்னர், ஜனவரி 20-ல் 8 சுயேச்சை வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர். இறுதியாக, திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாதக வேட்பாளர் சீதாலட்சுமி உட்பட 47 பேர் கொண்ட இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது.
அதன்பிறகு, தான் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த பத்மாவதி என்பவர் மனுதாக்கல் செய்திருந்தது தெரியவந்தது. பின்னர் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டு 47 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் 46ஆக குறைக்கப்பட்டது. இந்த குளறுபடி காரணமாகவே தேர்தல் நடத்தும் அதிகாரி மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகி வருகிறது. ஆனால், தேர்தல் நடத்தும் அதிகாரியை மாற்றம் செய்ததற்கான காரணத்தை தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக தெரிவிக்கவில்லை.