தமிழக மீனவர்கள் மீது தூப்பாக்கிசூடு? இலங்கை கடற்படை மீண்டும் அத்துமீறல்.!
நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை கைது செய்தனர்.

ராமேஸ்வரம் : நேற்று முன்தினம் தனுஷ்கோடி தலைமன்னார் இடையே மீன் பிடித்த 34 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்தது. இந்நிலையில், காரைக்கால் மீனவர்கள் 13 பேரை இன்று அதிகாலை கைது செய்துள்ளது. கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 13 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்துள்ளனர்.
அப்போது இலங்கை கடற்படையின் துப்பாக்கியை பறிக்க முயன்றதால் எதிர்பாராத விதமாக துப்பாக்கி சூடு நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் 2 மீனவர்கள் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்த 2 மீனவர்கள் இலங்கை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவர்கள் இருவருக்கும் பெரியதாக காயம் ஏதும் ஏற்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
நடந்தது என்ன?
அதிகாலையில் என்ன நடந்தது என்று அங்கிருந்த மீனவர் ஒருவர் தனியார் ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ளார். துப்பாக்கிசூடு சம்பவம் குறித்து பேசிய அவர், ‘கோடியக்கரை பகுதியில் 20 படகு வலை விரித்து வேலை செய்துகொண்டிருக்கும் பொழுது, அங்கிருந்த இலங்கை கடற்படை இரண்டு கப்பல் வந்ததது. துப்பாக்கி சூடு நடத்தியதால் நாங்கள் வலையை அறுத்துவிட்டு ஓடி வந்துட்டோம்.
அப்பொழுது, காரைக்கால் படகில் இருந் மீன்வர்கள் மீது துப்பாக்கி சூடு நடந்தது. உடனே, காரைக்கால் படகு மெதுவாக நின்றது, இதை தொடர்ந்து இலங்கை கடற்படை அந்த படகில் இருந்தவர்களை கைது செய்து அழைத்து சென்றனர். நாங்கள் இந்திய எல்லையில் தான் மீன் பிடித்துக்கொண்டிருந்தோம்” என்று கூறினார்.
இந்நிலையில், இலங்கை கடற்படையினரின் தொடர் அட்டூழியத்தால் தமிழக மீனவர்கள் கவலை தெரிவித்துள்னர். மேலும் இதற்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர். தற்போது, கைதுசெய்யப்பட்ட 13 மீனவர்களும் இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அங்கு அவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு நீதித்துறை நடுவர் முன் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கைது நடவடிக்கை மூலம் கடந்த 2 நாட்களாக இலங்கை அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது.
இலங்கையால் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை உடனடியாக விடுவிக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முன்னதாக கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.