ஒரே நாளில் 37 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை!
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ஒரே நாளில் 37 இந்திய மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளனர்.
சமீப காலமாக தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கதையாக உள்ள நிலையில், தனுஷ்கோடி அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நேற்று ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 23 மீனவர்களையும், இன்று நெடுந்தீவு அருகே 14 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
இந்நிலையில், இலங்கை கைது செய்த மீனவர்கள் 37 போரையும், 5 படகுகளை விடுதலை செய்ய மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதனிடையே, ராமேஸ்வரம் மீனவர்கள் 37 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ராமதாஸ் தனது X தள பக்கத்தில், இலங்கை கடற்படையினரின் தொடர் அத்துமீறல் கண்டிக்கத்தக்கது, கைது செய்யப்பட்ட 37 மீனவர்கள், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுவிக்க நடவடிக்கை தேவை என தனது கோரிக்கையை வைத்ததோடு, சிங்களப் படையினரின் திட்டமிட்ட பழிவாங்கலுக்கு முடிவு கட்ட வேண்டும் என தனது கடும் கண்டனத்தையும் முன் வைத்துள்ளார்.
இராமேஸ்வரம் மீனவர்கள் மேலும் 37 பேர் கைது: சிங்களப் படையினரின் திட்டமிட்ட பழிவாங்கலுக்கு முடிவு கட்ட வேண்டும்!
வங்கக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 37 பேரை அவர்களின் 5 படகுகளுடன் சிங்களக் கடற்படையினர் கைது செய்து இலங்கை சிறையில்…
— Dr S RAMADOSS (@drramadoss) October 29, 2023
இதற்கிடையில், தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையின் தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதலை தடுக்க கோரி, மத்திய அரசுக்கு தமிழக அரசு சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.