“அவதூறு பரப்பி ஆதாயம் அடைய மலிவான அரசியலில் சிலர் ஈடுபடுகின்றனர்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாட்டை படு பாதாளத்திற்கு தள்ளிய அந்த விடியா மூஞ்சிகளுக்கு விடியவே விடியாது என்று வடசென்னை வளர்ச்சித் திட்ட விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியிருக்கிறார்.
சென்னை: வடசென்னை உயர்கல்வித்துறை சார்பில் சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில், ரூ.1,383 கோடி மதிப்பீட்டில் 79 புதிய திட்டப் பணிகளை துவக்கி வைத்து, 29 முடிவுற்ற பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
பின்னர், விழா மேடையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ” விடியலை தருவது தான் உதயசூரியன், சூரியனை பார்த்தால் கண் கூசுபவர்களுக்கு விடியல் தெரியாது. மெட்ராஸ் என்கிற பெயரை சென்னை என மாற்றியவர் கருணாநிதி, சென்னையின் அடையாளங்களை உருவாக்கியது” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “விடியலை விடியா ஆட்சி என்று சொல்வார்கள். தமிழ்நாட்டை படு பாதாளத்திற்கு தள்ளிய அந்த விடியா மூஞ்சிகளுக்கு விடியவே விடியாது. விடியலைத் தருவதுதான் உதயசூரியன். உதயசூரியனால் கண்கள் கூசுபவர்களுக்கு விடியல்னா என்னன்னே தெரியாது என்று எதிர்கட்சி விமர்சனங்களை சாடினார்.
அவதூறு பரப்பி ஆதாயம்
வானிலை கணிப்புகளை விட அதிகளவு மழை கொட்டியதால் இவ்வளவு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இருந்தும் அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து இருந்ததால்தான் பெரிய உயிர்சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது. அவதூறு பரப்பி ஆதாயம் தேடலாம் என சிலர் மலிவான அரசியலில் ஈடுபடுகிறார்கள். கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது மழை, வெள்ள பாதிப்பில் இருந்து விரைவில் ஒட்டுமொத்த தமிழ்நாடும் மீண்டு வரும் என்றார்.
மழை நின்றவுடன் சென்னை மீண்டது
கடந்த ஆட்சியில் சென்னையில் மழை வந்தாலே எப்போதும் நீர் வடியும் என்று மக்கள் தவித்தனர். திமுக ஆட்சியில் மழை வெள்ளத்தில் இருந்து அடுத்த நாளே சென்னை மீண்டுள்ளது. முன்பெல்லாம் மழைவெள்ள பாதிப்பின் போது ஆட்சியாளர்களை களத்தில் பார்க்க முடியாது.
அப்படியே வந்தாலும் என்ன பிரச்சனை என்றே தெரியாமல் வாக்காளர் பெருமக்களே என பேசுவார்கள். தன்னார்வலர்கள் வழங்கக்கூடிய நிவாரண பொருட்களில் ஸ்டிக்கர்களை ஒட்டுவார்கள். அந்த காலம் எல்லாம் இப்போது மலையேறி போச்சு, இன்றைக்கு மழை நின்ற உடனே சென்னை மீண்டுவிட்டது என்று கூறினார்.