வேகம் அதிகரிப்பு! சென்னையை நெருங்கும் மாண்டஸ் புயல்!
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள மாண்டஸ் புயலின் வேகம் 12 லிருந்து 13 கிலோ மீட்டராக அதிகரிப்பு என வானிலை மையம் தகவல்.
சென்னையில் இருந்து தெற்கு தென்கிழக்கே 270 கி.மீ தொலையில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது. காரைக்காலில் இருந்து கிழக்கு தென்கிழக்கே 200 கி.மீ தொலையில் புயல் மையம் கொண்டுள்ளது. மணிக்கு 13 கி.மீ வேகத்தில் மாண்டஸ் புயல் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மாண்டஸ் புயல் அடுத்த 3 மணி நேரத்தில் சாதாரண புயலாக வலுவிழக்கக்கூடும் என்றும் மாண்டஸ் புயல் கரையை கடக்கும் போது 65 முதல் அதிகபட்சமாக 85 கி.மீ வரை காற்றின் வேகம் இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. சென்னை மெரினாவில் கடல் சீற்றம் காரணமாக கரையை தாண்டி அலைகள் வந்து செல்கின்றன. கடல் சீற்றத்தை அடுத்து மெரினா கடற்கரை முழுவதும் மூடப்பட்டது, பொதுமக்களை போலீசார் வெளியேற்றி வருகின்றனர்.