உப்பு சப்பில்லாத உரை; ஊசிப்போன உணவு பண்டம்-இபிஎஸ்..!
நடப்பு ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி உரையுடன் தொடங்கியது. அரசு தயாரித்த உரையை முழுமையாக படிக்காமல் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி புறக்கணித்தார். இதன்பின் அரசு தயாரித்த உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு சட்டப்பேரவையில் வாசித்தார். பின்னர் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டு அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
பிப்ரவரி 22ம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெறும் என சபாநாயகர் அபாவு தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொது செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ” ஆளுநர் உரையில் அரசு செயல்படுத்தவுள்ள திட்டங்கள் பற்றி கூறுவது மரபு. ஆனால் சென்ற ஆண்டு போலவே எந்த விதமான குறிப்பு எதுவும் இல்லை, அரசின் கொள்கைகளை விளக்கும் உரையாக இல்லை, இந்த ஆட்சியில் தமிழக மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது என்பதை குறிக்கும் வகையில் இந்த ஆண்டுக்கான ஆளுநர் உரை உள்ளது.
எந்த விதமான மக்கள் திட்டங்களையும் அரசு அறிவிக்கவில்லை, கசப்பு வார்த்தை ஜாலத்தை வாரி இறைத்துள்ளது. அதிமுக திட்டங்களை தங்கள் திட்டங்களாக கூறுகிறார்கள் அதை ஆளுநரும் பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். சுருக்கமாக திமுக அரசு தயாரித்த ஆளுநர் உரை பற்றி கூற வேண்டும் என்றால் உப்பு சப்பில்லாத உரை; ஊசிப்போன உணவு பண்டம் எதிர்வரும் ஆண்டில் அரசு என்ன செய்ய உள்ளது என்பது குறித்து ஆளுநர் உரையில் இல்லை” என தெரிவித்தார்.
பிப்ரவரி 22-ம் தேதி வரை சட்டசபை கூட்டுத்தொடர்..!
ஆளுநர் உரையை முழுமையாக படிக்கலாம் சென்றது தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிச்சாமி”தேசிய கீதம் இசைப்பது தொடர்பாக ஆளுநர் ஏற்கனவே சபாநாயகருக்கு கடிதம் எழுதி இருக்கிறார். கோரிக்கை நிறைவேற்றப்படாத காரணத்தால் ஆளுநர் உரையை புறக்கணித்துள்ளார் இது ஆளுநருக்கு அரசுக்கும் இடையே உள்ள பிரச்சனை.
சட்டப்பேரவையில் அதிமுக எதிர்க்கட்சியாக உள்ளது. அதற்கு எதிர்க்கட்சித் தலைவராக நான் உள்ளேன். துணைத் தலைவராக அதிமுக சார்பில் ஒருமனதாக உதயகுமார் அவர்களை துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கபட்டார். இது குறித்து பலமுறை சட்டப்பேரவை தலைவரிடம் கோரிக்கை வைத்தோம். எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமார் அங்கீகரிக்கப்பட்டு அவருக்கு தேவையான இருக்கையை ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளோம்.
ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு காரணத்தை சட்டப்பேரவைத் தலைவர் கூறுகிறார். இனியும் எந்த காரணத்தையும் சொல்ல மாட்டார் என நாங்கள் நம்புகிறோம். மரபை கடைபிடிக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார். மீண்டும் ஒருமுறை வலியுறுத்துவோம். அவரிடம் நல்ல பதில் கிடைக்கும் என நம்புகிறோம். அதை கடைப்பிடிக்க வேண்டும் எண்ணினால் நாங்கள் வைத்த கோரிக்கையை அவர் நிறைவேற்றுவார் என்று நம்புகிறோம் என கூறினார்.