மதுபான சிறப்பு அனுமதி – அதிமுக பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
மக்கள் விரோத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் திமுக அரசுக்கு மக்கள் விரைவில் தக்க பாடம் புகட்டுவர் என இபிஎஸ் ட்வீட்.
தமிழ்நாட்டில் திருமண மண்டபங்கள், விளையாட்டு அரங்கங்கள் உள்ளிட்டவைகளில் மதுபானம் விநியோகிக்க தமிழ்நாடு அரசு புதிதாக அரசாணை பிறப்பித்திருந்தது. அதன்படி, திருமண மண்டபம், விளையாட்டு மைதானங்களில் இனி சிறப்பு அனுமதி பெற்று மது விநியோகம் செய்யலாம் என்றும் ஒரு நாள் நிகழ்ச்சிக்கு கூட அனுமதி பெற்று மதுபானங்களை பயன்படுத்தலாம் எனவும் தகவல் பரவின.
அமைச்சர் விளக்கம்:
இதற்கு அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த சமயத்தில் சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டு நிகழ்ச்சிகள், சர்வதேச மாநாடுகளில் மட்டுமே மதுபானங்கள் பயன்படுத்த அனுமதி என்று அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்தார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், திருமணம் போன்ற ஒருநாள் நிகழ்வுகளில் அரசு அனுமதியுடன் மதுபானம் பயன்படுத்தலாம் என்ற தகவலில் உண்மையில்லை. இதற்கு அரசு ஒருபோதும் அனுமதி தராது என குறிப்பிட்டார்.
கடும் எதிர்ப்பு:
மேலும், சர்வதேச நிகழ்வுகளில் மதுபான அனுமதி என்பது மற்ற மாநிலங்களில் உள்ளது போல நிபந்தனைகளை பின்பற்றி தான் தமிழகத்திலும் செயல்படுத்தப்பட உள்ளது என கூறினார். இருப்பினும், தமிழக அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
இபிஎஸ் கண்டனம்:
இபிஎஸ் பதிவில், மதுவிலக்கே ஒற்றை இலக்கு என கூறிவிட்டு 12 மணிநேரம் மதுக்கடைகளை திறந்து வைத்திருக்கும் இந்த திமுக அரசு, இன்று கல்யாண மண்டபத்திலும், விளையாட்டுத் திடல்களிலும், மதுபானம் அருந்தலாம் என அனுமதித்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
விரோத செயல்கள்:
மதுவுக்கு அடிமையாக்கி இளைஞர்களின் எதிர்காலத்தை சீர்குலைத்து, கலாச்சாரத்தின் மீது திராவகத்தை வீசியுள்ள இந்த திராவக மாடல் அரசு, பொது அமைதியை சீர்குலைத்து குற்றச் செயல்களை அதிகரிக்கும் இத்தகைய மக்கள் விரோத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் இந்த அரசுக்கு மக்கள் விரைவில் தக்க பாடம் புகட்டுவர் என்றுள்ளார்.