திருச்சியில் சிலை.. தலைநகரில் அமைதிப் பேரணி.! கலைஞர் நினைவு தின சிறப்பு நிகழ்வுகள்…

Kalaignar Karunanidhi Memorial day Events

சென்னை : தமிழகத்தில் நீண்ட வருடங்கள் கோலோச்சிய திராவிட முன்னேற்ற கழக அரசியல் கட்சியை கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் தலைமை ஏற்று வழிநடத்தியவரும் , தமிழக முதல்வராக 4 முறை பொறுப்பில் இருந்து தமிழக அரசியலில் தனி ஆளுமை கொண்டவருமான கலைஞர் கருணாநிதியின் 6ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 7) அனுசரிக்கப்படுகிறது.

கலைஞர் கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதிலும் திமுகவினர் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து செயல்படுத்தி வருகின்றனர். முன்னதாக திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது முதலமைச்சர் முகாமில் இருந்து காணொளி காட்சி வாயிலாக திருச்சியில் அமைக்கப்பட்ட கலைஞர் சிலையை திறந்து வைத்தார்.

கலைஞர் சிலை திறப்பு :

திருச்சி திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட காட்டூர் பகுதியில் கலைஞர் கருணாநிதியின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை திறப்பு நிகழ்வில் காணொளி வாயிலாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிலையை திறந்து வைத்தார். திருச்சியில் நேரடி நிகழ்வில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் , தொண்டர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

சென்னை நிகழ்வு :

சிலை திறப்பு நிகழ்வில் கலந்து கொண்ட பிறகு , திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அமைதி பேரணியில் கலந்து கொண்டார். சென்னை, அண்ணா சாலை ஓமந்தூரார் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் சிலை அருகே  உள்ள கலைஞரின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அமைதி பேரணி :

அதன் பிறகு, வாலாஜா சாலை மார்க்கமாக சென்னை மெரினா கடற்கரை பகுதியில் காமராஜர் சாலையில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடம் நோக்கி நடைபெற்ற அமைதி பேரணியானது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

இந்த அமைதி பேரணியில் , திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, பொதுச்செயலாளர் துரைமுருகன், துணை பொதுச்செயலாளர்கள் பொன்முடி , ஆ.ராசா, கனிமொழி என முக்கிய திமுக தலைவர்கள் , திமுக தொண்டர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் பலரும் கருப்பு உடை அணிந்து கலந்து கொண்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்