“சினிமாவோடு அதனை மறந்துவிட வேண்டும்” விஜயை ‘டார்கெட்’ செய்யும் திமுக அமைச்சர்கள்?
நேற்று திமுக நிகழ்ச்சிகளில் பேசிய அமைச்சர்கள் கோ.வி.செழியன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் தவெக தலைவர் விஜயை கடுமையாக தாக்கி பேசியுள்ளனர்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், விக்கிரவாண்டியில் நடத்திய முதல் மாநாட்டிலேயே திமுகவை நேரடியாக கடும் விமர்சனம் செய்தார். அதனை தொடர்ந்து அண்மையில் நடைபெற்ற அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவிலும் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார் தவெக தலைவர் விஜய்.
திமுகவை தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் விஜயை நேரடியாகவும், மறைமுகமாகவும் விஜயை விமர்சனம் செய்து வருகின்றனர். திமுகவின் மூத்த அமைச்சர்கள், முதலமைச்சர், துணை முதலமைச்சர் விஜய் பற்றிய விமர்சனங்களை நேரடியாக முன்வைக்கவில்லை. இருந்தும் மற்ற அமைச்சர்கள், நிர்வாகிகள் விஜயை நேரடியாகவே விமர்சனம் செய்து வருகின்றனர் .
நேற்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை (நவம்பர் 27) முன்னிட்டு திருவெற்றியூர், கூடுவாஞ்சேரி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற திமுக விழாவில் அமைச்சர்கள் கோ.வி.செழியன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் உரையாற்றினார்.
இதில், திருவெற்றியூர் நிகழ்வில் பேசிய அமைச்சர் கே.வி.செழியன், ” திமுக கட்சி ஒரு பெருங்கூட்டம், விஜயோ, சீமானோ அதனை உரசி பார்க்க முடியாது. பெரியார் , அண்ணா , கலைஞர், தளபதி ஸ்டாலின் இவர்களின் ஒட்டுமொத்த வடிவம் உதயநிதி ஸ்டாலின் எனும் இளம் தலைவர். தம்பி விஜய், நீ என்ன வாழும் அம்பேத்கரா? போட்டோவுக்கு போஸ் கொடுத்தால் மட்டும் போதுமா? கலைஞர் முதலமைச்சராக இருந்த போது, அப்போதைய பிரதமர் வி.பி.சிங்கிடம் வேண்டுகோள் வைத்து அம்பேத்கர் புகைப்படத்தை 1 ரூபாய் நாணயத்தில் வைக்க சொன்னவர் கலைஞர். ” என விமர்சனம் செய்தார்.
அதே போல, செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியில் நடைபெற்ற விழாவில் பேசிய அமைச்சர் தாமோ.அன்பரசன் திமுக தொண்டர்களை பார்த்து, இப்போ நடிகரெல்லாம் கட்சி ஆரம்பிச்சுட்டான். ஒரு படத்துக்கு போனோமா பாத்தோமா வந்தோமான்னு இருக்கனும். நாம காசு கொடுத்தோம், பாத்தோம் அவ்ளோதான். அதோடு நிறுத்திக்கணும். அதுக்கப்புறம் கட்சி தான் ஞாபகத்துக்கு வரணும். ” என தொண்டர்களுக்கு கண்டிஷன்போட்டுள்ளார் திமுக அமைச்சர்.