திமுக எம்எல்ஏக்கள் குட்கா எடுத்துசென்ற விவகாரம்.! நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.!
சென்னை: கடந்த 2017இல் அதிமுக ஆட்சிக்காலத்தில் அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் தமிழக சட்டப்பேரவைக்குள் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை எடுத்து சென்றனர். தமிழகத்தில் புகையிலை, குட்கா பயன்பாடு அதிகரித்துள்ளது எனும் குற்றசாட்டை தமிழக சட்டப்பேரவையில் குறிப்பிட குட்கா கொண்டுசெல்லப்பட்டதாக கூறினர்.
சட்டப்பேரவையில் தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு சென்றதாக அப்போதைய சட்டமன்ற உரிமை மீட்பு குழு , மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் பதில் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியது.
இதனை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி அமர்வு, உரிமை மீறல் குழு அனுப்பிய நோட்டீசை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இந்த தனிநீதிபதி உத்தரவை எதிர்த்து, அதிமுக சார்பில் மீண்டும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கானது, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் , சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில், விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதில், அதிமுக ஆட்சி காலத்தில் திமுக எம்எல்ஏக்கள் மீது உரிமை மீறல் குழு அனுப்பிய நோட்டீஸ் குறித்து சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.