தொடர் அமளி… கூட்டத்தொடர் முழுவதும் அதிமுகவினர் அதிரடி சஸ்பெண்ட்.! 

ADMK Chief secretary Edappadi palanisamy

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஜூன் 20ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலை கணக்கில் கொண்டு காலை மாலை என இரு வேளைகளிலும் கூட்டத்தொடர் நடைபெறுகிறது. ஜூன் 29ஆம் தேதியுடன் கூட்டத்தொடர் நிறைவு பெறுகிறது.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் தொடர்பாக கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே அமளியில் ஈடுபட்டு வருகிறது அதிமுக. நேற்று முன்தினம் அமளியில் ஈடுப்பட்ட அதிமுகவினர் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். பின்னர் நேற்று அமளியில் ஈடுபட்டதால் அதிமுக எம்எல்ஏக்கள்  நேற்று ஒருநாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

அதே போல இன்றும் அதிமுகவினர் கூட்டத்தொடர் தொடங்கியதும் , கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆனால், கேள்வி நேரம் ஆரம்பிப்பதற்குஒருமணி நேரம் முன்னதாக தான் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டும் என சபாநாயகர் அப்பாவு கூறி அதிமுக கோரிக்கையை நிராகரித்தார்.

இதனால் அதிமுக எம்எல்ஏக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனை அடுத்து, அதிமுக எம்எல்ஏக்களை வெளியேற்ற அவை பாதுகாவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். இதனை அடுத்து, அதிமுக எம்எல்ஏக்கள் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அதன் பின்னர், திமுக அமைச்சர் துரைமுருகன், சபைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்து செயல்படுவதால் அவர்களை இந்த கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என தீர்மானம் கொண்டுவந்தார். இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து , அதிமுக உறுப்பினர்களை இந்த தொடர் முழுவதும் (ஜூன் 29 வரை) சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.

இந்த சஸ்பெண்ட் தொடர்பாக சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி,  சட்டப்பேரவையில் சபாநாயகர் எங்களுக்கு பேச அனுமதி தரவில்லை. சபாநாயகர் நடுநிலையுடன் செயல்படவில்லை. சாதிவாரி கணக்கெடுப்புக்காக தான் நாங்கள் வெளியேறுகிறோம் என கூறுவது தவறு என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்