தமிழக பட்ஜெட் எப்போது தாக்கல்? தேதியை அறிவித்த சபாநாயகர் அப்பாவு.!
2025-26ம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை மார்ச் 15ம் தேதி அமைச்சர் எம் ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.

சென்னை : தமிழ்நாடு அரசின் 2025 – 2026 நிதிநிலை அறிக்கை அடுத்த மாதம் 14ஆம் தேதி காலை 9.30 மணிக்குத் தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவையில் காலை 9.30 மணிக்கு தமிழக நிதிநிலை அறிக்கையை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்வார்.
இதற்கு பிறகு, மார்ச் 15ஆம் தேதி தேதி காலை 9.30 மணிக்கு வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய உள்ளார். தேர்தலுக்கு முந்தைய ஆண்டின் முழு பட்ஜெட் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. குறிப்பாக இந்த பட்ஜெட்டின்போது, பெண்கள், அரசு ஊழியர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் பட்ஜெட் அறிவிப்புக்கு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
2025-2026-ஆம் ஆண்டிற்கான முன்பண மானியக் கோரிக்கைகள் மற்றும் 2024-2025-ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் (இறுதி) ஆகியன 2025-ஆம் ஆண்டு மார்ச் 21-ஆம் நாள், வெள்ளிக்கிழமை அன்று பேரவைக்கு அளிக்கப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.