நீதிமன்ற தீர்ப்பையே சபாநாயகர் அப்பாவு ஏற்கவில்லை.. இபிஎஸ் குற்றச்சாட்டு!

Edappadi Palanisamy

தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். ஓபிஎஸ் உள்ளிட்ட 3 எம்எல்ஏக்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக, 10 முறை கடிதம் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

சட்டமன்றத்திற்குள் இருக்கை குறித்து கேள்வி எழுப்ப உரிமை இல்லை. இருக்கைகள் ஒதுக்குவது எனது தனிப்பட்ட உரிமை. சட்டம் விதி என்ன சொல்கிறதோ அதன் படி தான் நடக்கிறேன் என சபாநாயகர் அப்பாவு பதில் கூறினார். இதன்பின், எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக, பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், அவர்களை வெளியேற்றும்படி சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.

இருக்கை விவகாரம்! சபாநாயகர் அப்பாவு விளக்கம்.. பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு!

இதையடுத்து, அதிமுக உறுப்பினர்கள் பேரவையில் வெளிநடப்பு செய்தனர். பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டபின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தில், எங்களுடைய நியாயமான கோரிக்கையை சபாநாயகர் அப்பாவுவிடம் முன்வைத்துள்ளோம். எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை விவகாரம் குறித்து பலமுறை கடிதம் அளித்தும் சபாநாயகர் அப்பாவு தீர்வை அளிக்கவில்லை என குற்றசாட்டியுள்ளார்.

எங்கள் நியாயமான கோரிக்கை குறித்து பேரவையில் முழுமையாக பேச அனுமதிக்கப்படவில்லை. சபாநாயகர் தனக்கான மரபை கடைபிடிக்கவில்லை. சட்டப்பேரவையில் எந்த உறுப்பினரை எந்த இருக்கையில் அமரவைக்க வேண்டும் என முடிவு செய்வது சபாநாயகரின் தனிப்பட்ட அதிகாரம் என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். புனிதமான இருக்கையில் உள்ள சபாநாயகர் இதில் நடுநிலையோடு செயல்பட வேண்டும்.

மக்கள் பிரச்சனைகளுக்கு அமைச்சர்கள் பதில் தரும் முன்பே சபாநாயகர் பேசி விடுகிறார். ஓபிஎஸ் உள்ளிட்டோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது செல்லும் என நீதிமன்றமே கூறியுள்ளது. ஓபிஎஸ் உள்ளிட்ட 3 பேரும் எந்த கட்சியையும் சாராதவர்கள் என பல முறை கடிதம் கொடுத்துள்ளோம்.  நீதிமன்ற தீர்ப்பையே சபாநாயகர் ஏற்கவில்லை, அதுமட்டுமில்லாமல், நீதிமன்ற தீர்ப்பின் நகலை அளித்த பின்பும் சபாநாயகர் நடவடிக்கை எடுக்காதது சரியல்ல. இருக்கை ஒதுக்கீடு குறித்த கோரிக்கைகளை நிறைவேற்றாதது ஏன் என சபாநாயகர் விளக்க வேண்டும் என்றார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்