நாளை முதல் சமையல் கியாஸ் தட்டுப்பாடு? காலவரையற்ற ‘ஸ்ட்ரைக்’ அறிவிப்பு!
நாளை முதல் எல்பிஜி கியாஸ் சிலிண்டர் டேங்கர் லாரிகள் இயங்காது என தென்மாநில எல்பிஜி டேங்கர் லாரி சங்கத்தினர் அறிவித்துள்ளதால் தமிழ்நாட்டில் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும் நிலை எழுந்துள்ளது.

சென்னை : மத்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் 2025-2030 ஆண்டுகளுக்கான புதிய ஒப்பந்தத்தை அண்மையில் அறிவித்துள்ளன. அதன்படி, டேங்கர் லாரி வாடகை கட்டணம் கிலோமீட்டருக்கு 10-15% குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. லாரிகளின் பராமரிப்பு, ஓட்டுநர்களின் தகுதி தொடர்பாக கடுமையான விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்றும் , இதற்கு இணங்காத லாரிகளுக்கு அபராதம் அல்லது ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் விதிமுறை உள்ளது என்றும் ,
எல்.பி.ஜி டேங்கர்களுக்கு புதிய GPS கண்காணிப்பு முறை மற்றும் டிஜிட்டல் டிராக்கிங் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றும், ஒப்பந்த காலக்கெடு 10 ஆண்டுகள் வரை இருந்த நிலையில் அவை தற்போது 5 ஆண்டுகளாக நிறைந்தர நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. இந்த கடுமையான விதிமுறைகளுக்கு டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தில் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இதனை குறிப்பிட்டு பேசிய தென் மண்டல எல்.பி.ஜி கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சுந்தரராஜன், ” 2025 – 2030-ம் ஆண்டுக்கான புதிய ஒப்பந்தத்தை மத்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனம் அறிவித்தது. இந்த ஒப்பந்தத்தில் இருக்கும் கடுமையான விதிமுறைகளை தளர்த்த வேண்டும்.” என வலியுறுத்தினார்.
“இதுகுறித்து எண்ணெய் நிறுவன அதிகாரிகளிடம் வலியுறுத்தியும்கூட எந்த அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை. எனவே நாளை முதல் காலவரையற்ற போராட்டம் நடத்த உள்ளோம். நாளை முதல் கியாஸ் ஏற்றும் இடங்களில் இருந்து லோடு ஏற்றாமல் லாரிகள் சேவை நிறுத்தப்படும். தென் மாநிலங்களை போல, இந்தியா முழுவதிலுமே இதே பிரச்சனைதான் என்பதால், மற்ற டேங்கர் லாரிகள் தரப்பிலும் போராட தயாராக உள்ளனர். பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் வரை வேலைநிறுத்த போராட்டம் தொடரும் என சுந்தராஜன் அறிவித்தார்.
நாளை முதல் எல்.பி.ஜி கியாஸ் சிலிண்டர் டேங்கர் லாரி இயங்காது என்பதால் தமிழ்நாடு மட்டுமல்லாது 6 தென் மாநிலங்களில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது எனக் கூறப்படுகிறது. இந்த தட்டுப்பாடை கருத்தில் கொண்டு லாரிகள் அரசு மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.