தலையை மொட்டை அடித்து முடியை விற்று பெற்ற பிள்ளைகளின் பசியை போக்கிய அன்புள்ளம் கொண்ட அம்மா.. மனதை நெகிழவைக்கும் சம்பவம்..
- பெற்ற பிள்ளைகளின் பசியை போக்க தலையை மொட்டை அடித்த தாய்.
- மனதை நெகிழவைக்கும் சம்பவம்.
சேலம் மாவட்டம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் செல்வம் வயது 37. இவரது மனைவியின் பெயர் பிரேமா வயது 31. இந்த தம்பதிக்கு மூன்று ஆண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள், வீமனுார் பகுதியில்,கடந்த 2015ம் ஆண்டு செங்கல் சூளையில் பணியாற்றினர்.பின் நண்பர் ஒருவரின் ஆலோசனையின் படி கடன் வாங்கி, செங்கல் சூளை வைத்து,அதில் பெரும் நஷ்டம் அடைந்தனர். இதன் காரணமாக அடந்த கடன் தொல்லையால், ஏழு மாதங்களுக்கு முன், செல்வம் தீக்குளித்து தற்கொலை செய்தார்.
இவர்களுக்கு உறவினர்கள் உட்பட யாரும் உதவ முன் வரவில்லை. இவரது மனைவி பிரேமா,அருகில் உள்ள செங்கல் சூளை ஒன்றில், கூலி வேலைக்கு சென்று வருகிறார்.ஏற்கனவே கந்து வட்டிக்கு பணம் கொடுத்தவர்கள்,தற்போது பணம் கேட்டு தொந்தரவு செய்வதால், மனம் உடைந்த பிரேமா கடந்த வாரம், தற்கொலைக்கு முயன்று, காப்பாற்றப்பட்டு உள்ளார். இந்நிலையில், தனது மூன்று குழந்தைகள் பசியால் துடித்ததால், தன் தலையை மொட்டை அடித்து, அந்த முடியை விற்பனை செய்து, தனது குழந்தைகளுக்கு உணவு வாங்கி கொடுத்துள்ளார். இந்த தாயுள்ளம் குறித்து அறிந்த, அதே பகுதியைச் சேர்ந்த பாலா என்ற இளைஞர் இந்த உன்னத தாயான பிரேமாவை சந்தித்து,அவருக்கும் அவரது குழந்தைகளுக்கும் உணவுக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
இந்த மனதை உருகவைக்கும் சம்பவம் குறித்து அந்த இளைஞர் கூறியதாவது, சமூக வளைதளமான ‘பேஸ்புக்’கில், இந்த தாயுள்ளம் கொண்ட பிரேமாவின் நிலை குறித்து பதிவிட்டோம். இதை அறிந்த கருணை உள்ளம் கொண்ட பலரின் உதவியால், 1 லட்சம் ரூபாய் வரை நிதி கிடைத்துள்ளது. இந்த நிதியை வைத்து, முதலில், கடன்காரர்களின் பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்திவிட்டு அவரின் மூன்று குழந்தைகளின் படிப்புக்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறோம் என்று அவர் கூறினார். இதற்கிடையில், பிரேமாவுக்கு தொல்லை கொடுத்து வரும், கந்து வட்டி கும்பல் குறித்து, காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.