பெற்ற தாயை 10 ஆண்டுகளாக வீட்டிற்குள் பூட்டி வைத்திருந்த மகன்கள்..! என்ன காரணம்…?
பெற்ற தாயை 10 ஆண்டுகளாக வீட்டிற்குள்ளேயே அடைத்து வைத்திருந்த மகன்கள்.
தஞ்சாவூர் மாவட்டம் காவேரி நகர் பகுதியை சேர்ந்தவர் ஞானஜோதி. இவருக்கு வயது 62. இவரது கணவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆவார். இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இவரது கணவர் மற்றும் ஒரு மகள் இருவரும் உயிரிழந்துவிட்டனர். இதனை அடுத்து இரண்டு மகன்கள் இருந்த நிலையில் இவரது மூத்த மகன் சண்முகசுந்தரம் காவல்துறை அதிகாரியாகவும், இளைய மகன் வெங்கடேசன் என்பவர் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் இரண்டு மகன்களும் சொத்துப் பிரச்சினை காரணமாக ஞான ஜோதியை கைவிட்டுவிட்டதோடு அவரை பெற்ற தாய் என்று கூட பாராமல் வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்துள்ளனர். நீண்ட நாட்களாக வீட்டிற்குள் அடைக்கப்பட்டிருந்த அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், அவர் பசியால் தனது வீட்டின் தரையை பெயர்த்து மண்ணை எடுத்து உட்கொண்டு வந்துள்ளார். இதனால் அவரது உடலில் எந்த வித சத்துக்களும் இல்லாமல் எலும்பும் தோலுமாக மாறியிருந்தார். இதுகுறித்து ஜெயச்சந்திரன் என்பவர் செல்போன் மூலமாக வீடியோ எடுத்து தஞ்சை மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைத்தார்.
இந்த வீடியோ காட்சியை பார்த்த ஆட்சியர் அதிர்ச்சி அடைந்த நிலையில் மூதாட்டியை உடனடியாக மீட்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி சமூக நலத்துறைக்கு உத்தரவு பிறப்பித்தார். காவல்துறை அதிகாரிகளின் பாதுகாப்புடன் சமூகநலத்துறை சம்பவ இடத்திற்கு சென்று மூதாட்டியை மீட்டனர். அப்போது அவரது மகன் சண்முக சுந்தரம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், பெற்ற தாயை கவனிக்காமல் வாக்குவாதத்தில் ஈடுபடுவது முறையா? என திட்டி உள்ளனர். அதனைத் தொடர்ந்து அப்பெண்ணை மீட்டு தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். பின் அவரை இல்லத்தில் தங்க வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.