மனைவியுடன் சேர்ந்து 70 வயது தாயை எரித்துக் கொல்ல முயன்ற மகன் கைது!
வேலைக்கு செல்லவில்லை எனும் காரணத்தால் தன் வீட்டில் தங்கியிருந்த 70 வயது தாயை தன் மனைவியுடன் சேர்ந்து கொல்ல முயன்ற நபரை எட்டயபுரம் போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள மெட்டில்பட்டி மேட்டு தெருவைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மனைவிதான் மகாலட்சுமி. இவருக்கு தற்போது 70 வயது ஆகிறது. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பாகவே கிருஷ்ணன் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதனை அடுத்து தனது மகன் முருகேசன் என்பவரின் வீட்டில் மகாலட்சுமி இருந்து வந்துள்ளார். மேலும் 100 நாள் வேலைத்திட்டத்திற்கு மகாலட்சுமி சென்று வந்துள்ளார். ஆனால் அண்மையில் மகாலட்சுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே சில மாதங்களாக அவர் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.
இதனால் தாயின் வருமானம் கிடைக்கவில்லை என ஆத்திரமடைந்த மகனும் மருமகளும் தினமும் வேலைக்கு செல்லுமாறு சித்திரவதை செய்து வந்துள்ளனர். ஆனால், அவர் உடல்நலக்குறைவு காரணமாக செல்ல முடியாமல் இருக்கவே மீண்டும் இதுகுறித்து தகராறு செய்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று தகராறு முற்றவே மிகவும் வயதாகி உடல் மெலிந்த நிலையில் காணப்படக்கூடிய 70 வயது தாயை தாய் என்றும் பாராமல் தனது மனைவியுடன் சேர்ந்து மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்க முயற்சித்துள்ளார் முருகேசன்.
ஆனால், ஏற்கனவே சண்டை சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் உள்ளே வரவே பாதி எரிந்த நிலையில் இருந்த வயதான மகாலட்சுமியை அக்கம் பக்கத்தினர் காப்பாற்றி அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அதன்பின் முருகேசன் மற்றும் அவரது மனைவி சுப்புலட்சுமி மீது போலீசில் புகார் அளித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் முருகேசன் மற்றும் அவரது மனைவி சுப்புலட்சுமியை கைது செய்துள்ளனர். பெற்ற தாய் என்றும் பாராமல் பணத்திற்காக மனைவியுடன் சேர்ந்து தீ வைத்து கொளுத்திய மகனின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.