“பெண்களை மதிக்கின்ற ஒருவரை பாடநூல் கழக தலைவராக நியமிக்க வேண்டும்” -ஓபிஎஸ் கோரிக்கை..!
தமிழ்நாடு பாடநூல் நிறுவனம்,கல்வியியல் பணிகள் மற்றும் கழக தலைவராக ஐ.லியோனி அவர்களை நியமனம் செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த புதன்கிழமையன்று உத்தரவிட்டார்.
இந்நிலையில்,பெண்களை மதிக்கின்ற ஒருவரை தமிழ்நாடு அரசு பாடநூல் கழக தலைவராக நியமிக்க வேண்டும் என்று முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது :
இந்தச் செயலை, இந்தக் கருவியால், இவன் முடிக்க வல்லவன்:
இந்தச் செயலை, இந்தக் கருவியால், இவன் முடிக்க வல்லவன் என்பதைத் தெரிந்து கொண்டு அவனிடம் அந்த வேலையை ஒப்படைக்க வேண்டும் என்ற திருவள்ளுவரின் வாக்கிற்கு முற்றிலும் முரணான வகையில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் நியமிக்கப்பட்டு இருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் முக்கிய நோக்கம்:
பள்ளி மாணவ, மாணவியருக்கு தரமான புத்தகங்கள் கிடைப்பதை உறுதி செய்வதும், தரத்தை தொடர்ந்து மேம்படுத்துவதும் தான் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் முக்கிய நோக்கமாகும்.
அதாவது, ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான தமிழ் மற்றும் ஆங்கில வழிப் பாடநூல்கள், மேல்நிலை வகுப்பிற்கான தொழிற்கல்விப் பாடப் புத்தகங்கள், ஆசிரியர் பட்டயப் பயிற்சிக்கான பாடப் புத்தகங்கள் உள்ளிட்டவற்றை தயாரித்து, அவற்றை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இலவசமாகவும், தனியார் பள்ளிகளுக்கு மிகக் குறைந்த விலையிலும் வழங்கி வரும் பணியை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மேற்கொண்டு வருகிறது.
இந்த நிறுவனத்தால் தயாரித்து வழங்கப்படும் பாடப் புத்தகங்கள் மூலம் அளவில் உலக அளவில், இந்திய நடைபெற்ற நிகழ்வுகளையும், புரட்சிகளையும், அறிவியல் கண்டுபிடிப்புகளையும், இந்திய விடுதலைப் போராட்டத்திற்காக பாடுபட்ட தலைவர்கள் பற்றியும், விடுதலைப் போராட்டத்திற்குப் பிறகு இந்தியத் திருநாட்டிற்காக பாடுபட்ட தலைவர்கள் பற்றியும், தமிழ்நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்கள் பற்றியும், சமூகநீதி, பெண்கள் முன்னேற்றம், வறுமை ஒழிப்பு ஆகியவற்றிற்காக பாடுபட்ட தலைவர்கள் பற்றியும் மாணவ, மாணவியர் தெரிந்து கொள்கின்றனர்.
கழகத்தின் நோக்கத்தையே சிதைப்பது:
தமிழ்நாட்டு மாணவ, மாணவியரின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் வகையில், வரலாறு, அரசியல், பொது அறிவு, சமூகவியல், அறிவியல் உள்ளிட்ட பல்வேறு பாடப் புத்தகங்களில் தரமான பாடங்களை வடிவமைக்கின்ற, தமிழர் பண்பாடு மற்றும் நாகரிகத்தை எடுத்துரைக்கின்ற பணியை மேற்கொண்டு வரும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக திரு. திண்டுக்கல் லியோனி அவர்களை நியமித்து இருப்பது இந்தக் கழகத்தின் நோக்கத்தையே சிதைப்பதாக அமைந்துள்ளது. இதன்மூலம் இந்தக் கழகத்தின் தரம் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலை உருவாகும்.
நகைச்சுவை என்ற பெயரில்,அருவருப்பான முறை:
பட்டிமன்றம் என்ற போர்வையில், பெண்களை இழிவாகப் பேசுவதையும், அரசியல் கட்சித் தலைவர்களை நாகூசும் வகையில் வசைபாடுவதையும், நாகரிகமற்ற கருத்துக்களை, தவறான கருத்துக்களை, ஒழுக்கமற்ற கருத்துக்களை மக்கள் மனங்களில், குறிப்பாக இளைய சமுதாயத்தினர் மனங்களில் விதைக்க முயற்சி செய்வதை வாடிக்கையாகக் கொண்டவர் திரு. லியோனி அவர்கள். நகைச்சுவை என்ற பெயரில் அரசியல் கட்சித் தலைவர்களை அருவருப்பான முறையில் விமர்சிக்கக் கூடியவர் திரு.லியோனி அவர்கள். இவரை இந்தப் பதவியில் நியமிப்பதன் மூலம் தவறான கருத்துக்கள் மாணவ, மாணவியரிடம் எடுத்துச் செல்லப்படுவதோடு,அவர்களின் எதிர்காலம் வெகுவாக பாதிக்கப்படும்.
பெண்களை மதிக்கின்ற ஒருவர்:
எனவே, தமிழ்நாட்டின் எதிர்காலத் தூண்களாகிய மாணவ, மாணவியரின் நலனைக் கருத்தில் கொண்டு, நல்ல கருத்துக்கள் மாணவ, மாணவியரை சென்றடைய வேண்டும் என்பதன் அடிப்படையில் இந்த நியமனத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்றும், பெண்களை மதிக்கின்ற ஒருவரை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக நியமிக்க வேண்டும் என்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில்,சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த லியோனி,”வரும் கல்வியாண்டு முதல் தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்களில் மத்திய அரசு என்பதற்கு பதில் ஒன்றிய அரசு என அச்சிடப்படும்”,என தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.