சற்று நிம்மதி…புயலால் தமிழகத்திற்கு எந்த எச்சரிக்கையும் இல்லை – வானிலை ஆய்வு மையம் தகவல்!
சென்னை:தெற்கு அந்தமான் கடற்பகுதியில் இன்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது,டிசம்பர் 2 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி,அதன்பின்னர் புயலாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை தீவிரம் மற்றும் குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.இதனால்,பல்வேறு பகுதிகளில் சாலைகள் மற்றும் குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இன்று வங்கக்கடலின் தெற்கு அந்தமான் கடற்பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் சற்று முன்னதாக தெரிவித்தது.
மேலும்,இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி பின் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும்,அதன்பின்னர்,புயலாக மேலும் வலுப்பெற்று வடக்கு ஆந்திரா, தெற்கு ஓடிசாவை நோக்கி நகரும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக,புயல் தொடர்பாக தமிழகத்திற்கு எந்தவித எச்சரிக்கையும் இல்லை என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:
“நாளை கடலோர மாவட்டங்களில் இடி,மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.அதே சமயம்,சென்னை,காஞ்சிபுரம்,தென் மாவட்டங்களில் மிதமான மழை தொடரும்”, என்று தெரிவித்தார்.
மேலும்,பேசிய அவர்,”இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது டிசம்பர் 2 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று,டிச.4 ஆம் தேதி வடக்கு ஆந்திரா, தெற்கு ஓடிசாவை நோக்கி நகரும்.
எனினும்,புயல் தொடர்பாக தமிழகத்திற்கு எந்தவித எச்சரிக்கையும் இல்லை.ஏனெனில்,இது வடக்கு ஆந்திரா, தெற்கு ஓடிசாவை நோக்கி நகருவதால் அந்த பகுதிகளில் மட்டுமே கனமழை பாதிப்பு இருக்கும்.
இருப்பினும்,வங்கக்கடல் பகுதிகளுக்கு தமிழக மீனவர்கள் 3 நாட்களுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம்”,என்று தெரிவித்துள்ளார்.