சில திட்டங்கள் வரவேற்கத்தக்கவை: கடன்சுமை கவலையளிக்கிறது – ராமதாஸ்

Default Image

தமிழக அரசின் 2022-23 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
இதைத்தொடர்ந்து, பல அரசியல் தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதன்படி, தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக பட்ஜெட் மக்களுக்கு ஏமாற்றமே. மக்களை ஏமாற்றும் வெத்துவேட்டு அறிக்கையாக பட்ஜெட் உள்ளது. கல்விக்கடன் தள்ளுபடி குறித்து பட்ஜெட்டில் அறிவிப்பு இல்லை. மகளிருக்கு உரிமைத்தொகையும் தள்ளிபோடப்பட்டுள்ளது என விமர்சனம் செய்தார்.

பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் பயனளிக்கக்கூடியவை:

இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சில திட்டங்கள் வரவேற்கத்தக்கவையாக இருந்தாலும் , சில திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது. பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறைக்காக அறிவிக்கப்பட்டுள்ள சில திட்டங்கள் மிகவும் வரவேற்கத்தக்கவையாகும். பள்ளிக்கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ.32,599 கோடியிலிருந்து, ரூ.36,895 கோடியாக உயர்த்தப்பட்டிருப்பதும், அரசு பள்ளிகளின் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக 5 ஆண்டுகளில் ரூ.7,000 கோடியில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதும் பயனளிக்கக்கூடியவை .

மக்களை கடுமையாக பாதிக்கும்:

பெண்கள் குறைந்தபட்சம் பட்டப்படிப்பு படிப்பதை உறுதி செய்யும் வகையில், கல்லூரிகளில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 உதவி வழங்கப்படும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிழல் நிதிநிலை அறிக்கையில் அறிவித்திருந்தோம். அதே திட்டம் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையிலும் இடம் பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில், சுகாதாரத்துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ.18,933 கோடியிலிருந்து ரூ.17,901 கோடியாகவும், பொது வினியோகத்திட்டத்திற்கான மானியம் ரூ.8437 கோடியிலிருந்து ரூ.7500 கோடியாகவும் குறைக்கப் பட்டிருப்பது மக்களை கடுமையாக பாதிக்கும்.

வருத்தம் அளிக்கிறது:

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 நிதியுதவி, மின் கட்டணத்தை மாதம் ஒருமுறை வசூலித்தல், தனியார் நிறுவனங்களில் தமிழர்களுக்கு மட்டுமே வேலை வழங்குவதற்காக சட்டத்தை நிறைவேற்றுதல் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்து எந்த அறிவிப்பும் இடம் பெறாதது வருத்தம் அளிக்கிறது. தமிழக அரசு 2022-23 ஆம் ஆண்டில் ரூ.81,371 கோடி மட்டுமே கடன் வாங்க வேண்டியிருக்கும் என கணிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது நிகரக் கடன் மதிப்பு ரூ.90,116 கோடியாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி 2023-ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் தமிழக அரசின் கடன் ரூ.6 லட்சத்து 53,348 கோடியாக அதிகரிக்கும் என்பதும் கவலையளிக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்