“ஷூட்டிங் நடத்தும் விஜய்., ‘சிலருக்கு’ ஒன்னும் தெரியல! இதுதான் லட்சணம்” அண்ணாமலை காட்டம்!
விஜய்க்கு யாரோ ஒருவர் எழுதி கொடுக்குறாங்க. அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு வந்த சிலருக்கு எத்தனை தொகுதிகள் இருக்கிறது என்பதே தெரியவில்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

சென்னை : மக்களவை தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக கடந்த மார்ச் 5ஆம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில், திமுக, அதிமுக, விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், பாமக, தவெக என பல்வேறு கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். பாஜக, நாதக, தமாகா உள்ளிட்ட கட்சியினர் இதில் பங்கேற்கவில்லை.
இந்த அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் குறித்தும், தவெக தலைவர் விஜய் தொகுதி மறுசீரமைப்பு பற்றி’ தென் மாநிலங்களின் பிரிதிநிதித்துவம் குறையும்’ என அறிக்கை வெளியிட்டு இருந்தது குறித்தும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது கருத்துக்களை கூறினார்.
இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, ” தவெக தலைவர் விஜய்க்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து யாரோ எழுதி கொடுக்குறாங்க. அப்புறம் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு விஜய் கட்சி சார்பாக யாரோ ஒருத்தர் (தவெக பொதுச்செயலாளர் ஆனந்த்) வராங்க. அவங்களுக்கு இந்தியாவில் 543 தொகுதி இருக்கிறது என்பதே தெரியவில்லை. பத்திரிகையாளர்கள் தான் மொத்தம் 543 தொகுதி என்றே சொல்றாங்க. விஜய் கட்சி சார்பாக வந்தவர் அப்புறம் தான் 543 தொகுதினு சொல்றார்.
இன்னொரு தலைவர் (மநீம தலைவர் கமல்ஹாசன்) 453 தொகுதிகள் என பேசியே முடித்துவிட்டார். அவர் பேசி முடித்ததற்கு பிறகு தான் அது 453 தொகுதிகள் இல்லை 543 தொகுதிகள் என்று சொல்றாங்க. நேற்று (மார்ச் 5) அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு வந்த சில அரசியல் தலைவர்களுக்கு இந்தியாவில் எத்தனை எம்பிக்கள் இருக்கிறார்கள் என்பதே தெரியவில்லை. அவங்களிடம் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பை பார்த்து எனக்கு ஆச்சரியம்.
543 தொகுதிகள் இருக்கிறது என்று கூட தெரியாமலே சில கட்சிகள் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு வந்து வடை, பஜ்ஜி, போண்டா சாப்பிட்டு டீ குடித்துவிட்டு மோடிஜியையும், பாஜகவையும் திட்டிவிட்டு கிளம்பி வீட்டுக்கு போய்ட்டாங்க. இதுதான் அனைத்துக்கட்சி கூட்டத்தின் லட்சணம். இதனை வேறு எப்படி சொல்வது. ” என அண்ணாமலை தனது காட்டமான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.