“அம்பேத்கர்… அம்பேத்கர்…” அமித்ஷாவை வன்மையாக கண்டிக்கிறேன் – கொந்தளித்த விஜய்!
அண்ணல் அம்பேத்கரை அவமதித்த மத்திய உள்துறை அமைச்சரை தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன் என விஜய் பதிவிட்டுள்ளார்.
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இப்போது அம்பேத்கர் அம்பேத்கர் என்று பேசுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதில் கடவுள் பெயரை கூறினால் புண்ணியம் வந்து சேரும் என பேசியது பெரும் சர்ச்சையை உருவாகியுள்ளது.
அண்ணல் அம்பேத்கர் குறித்த மத்திய அமைச்சர் அமித்ஷாவின் இந்த சர்ச்சை கருத்துக்கு நாடாளுமன்ற இரு அவைகளிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஜெய் பீம் ஜெய் பீம் என கோஷமிட்டபடி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி, விசிக தலைவர் திருமாவளவன், உள்ளிட்ட பலர் தங்கள் எதிர்ப்பு கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். அதே போல தவெக தலைவர் விஜயும் தனது கண்டனத்தை சமூக வலைதளபக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
விஜய் பதிவிடுகையில், யாரோ சிலருக்கு வேண்டுமானால் அம்பேத்கர் பெயர் ஒவ்வாமையாக இருக்கலாம். சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் இந்திய மக்கள் அனைவருக்கும் அவர்கள் உயரத்தில் வைத்துப் போற்றும் ஒப்பற்ற அரசியல் மற்றும் அறிவுலக ஆளுமை அம்பேத்கர்.
அம்பேத்கர்… அம்பேத்கர்… அம்பேத்கர்… அவர் பெயரை உள்ளமும் உதடுகளும் மகிழ உச்சரித்துக்கொண்டே இருப்போம். எங்கள் கொள்கைத் தலைவரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அண்ணலை அவமதித்த ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சரை, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
யாரோ சிலருக்கு வேண்டுமானால் அம்பேத்கர் பெயர் ஒவ்வாமையாக இருக்கலாம். சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் இந்திய மக்கள் அனைவருக்கும் அவர்கள் உயரத்தில் வைத்துப் போற்றும் ஒப்பற்ற அரசியல் மற்றும் அறிவுலக ஆளுமை, அவர்.
அம்பேத்கர்…
அம்பேத்கர்… அம்பேத்கர்…
அவர் பெயரை
உள்ளமும் உதடுகளும்…— TVK Vijay (@tvkvijayhq) December 18, 2024