ஈசிஆர் சம்பவம் : “போலீசாருக்கு இதெல்லாம் செஞ்சி கொடுங்க.” அண்ணாமலை அட்வைஸ்! 

காவல்துறையினர் அதிகமாக ரோந்து போக நான்கு சக்கர வாகனங்கள், இரு சக்கர வாகனங்களை அரசு வாங்கி கொடுக்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார். 

ECR Issue - TN BJP State leader Annamalai

சென்னை : ஈசிஆர் சாலையில் காரில் பயணித்த பெண்களை, மற்றொரு காரில் பயணித்த ஓர் கும்பல் துரத்தும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி தற்போது அரசியல் தளத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. அந்த காரில் குறிப்பிட்ட கட்சிக்கொடி பொறுத்தப்பட்டிருப்பதால் அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சி தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்து தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். 

இச்சம்பவம் குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறுகையில், “ ஈசிஆர் சம்பவம் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது. நானும் ஈசிஆரில் தான் இருக்கிறேன். ஈசிஆர் பகுதியில் நள்ளிரவு, அதிகாலை வேளையில் இளைஞர்கள் பெண்கள் அதிகளவில் அங்கு செல்கிறார்கள். அங்கு நிறைய தங்குமிடம் இருக்கிறது. அவர்களுக்கு ஒரு சுதந்திரம் வேண்டும் என அங்கெல்லாம்  செல்கிறர்கள். ஈசிஆர் பகுதியில் எப்போதுமே அங்கு போதுமான பாதுகாப்பு இருக்காது. 

சம்பவத்தன்று அதிகாலை திமுக கொடி போட்ட காரில் பயணித்த இளைஞர்கள் அந்த பெண்களிடம் மிக மோசமாக நடந்து கொண்டதை நாம் வீடியோ வாயிலாக பார்க்கிறோம். தமிழகத்தில் எந்தளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என்பதற்கு பல உதாரணங்கள் இருந்தும் தினமும் புதுசுபுதுசாக உதாரணங்கள் வருகிறது. 

மகாத்மா காந்தி சொன்னது போல ஒரு பெண் நள்ளிரவில் எப்போது சுதந்திரமாக நடந்து போகிறார்களோ அப்போது தான் நாடு முழு சுதந்திரம் பெற்றது என்று சொன்னார்.  என்னை பொறுத்தவரையில் இந்தியா முழுக்க முழு சுதந்திரம் கிடைத்ததாக நான் பார்க்கிறேன்.ஆனால், தமிழ்நாட்டிற்கு முழு சுதந்திரம் கிடைக்கவில்லை. பெண்கள் நள்ளிரவில் சென்றால் பிரச்சனை, பகல் வேளையில் சென்றால் பிரச்சனை, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இரவு, 7.45 மணிக்கு சென்றால் பிரச்சனை என தமிழகத்தில் எங்கும் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்பது தினமும் ஊர்ஜிதப்படுத்தப்படுகிறது. அதற்கு ஈசிஆர் சம்பவமும் ஒரு உதாரணம். 

உடனடியாக மாநில அரசு காவல்துறைக்கு பேட்ரோல் (ரோந்து) வாகனங்களை அதிகமாக வாங்கி கொடுக்க வேண்டும். ரோந்து போக அதிகமாக டூ வீலர்கள் வாங்கி கொடுக்க வேண்டும். தேவை இருப்பின் காவல் நிலைய எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். காவலர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். பெண்கள் பாதுகாப்புக்காக தமிழக அரசு இதுவரை ஒரு துருப்பு கூட கிள்ளி போடாமல் இருந்து வருகிறது. “ என அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்தார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்