சில கட்சிகள் எங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன- கமல்..!
நாட்டுக்காக உழைத்தவர்கள், நேர்மையாளர்கள் நம்மை தேடி வருவார்கள் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இன்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் 2-ம் கட்ட பரப்புரையை இன்று தொடங்குகிறார். தேர்தல் பிரச்சாரத்தை துவங்குவதற்கு முன் சென்னை தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேசி முடிவு செய்வோம். இன்னும் சில கட்சிகள் எங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. அரசியல் மாற்றத்திற்கு உதவுபவர்களுடன் கூட்டணி வைக்க தயாராக உள்ளேன் என தெரிவித்துள்ளார்.
நல்லவர்கள் வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தோம். நாட்டுக்காக உழைத்தவர்கள், நேர்மையாளர்கள் நம்மை தேடி வருவார்கள். கலாமின் அறிவியல் ஆலோசகராக செயல்பட்ட பொன்ராஜ் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்துள்ளார். அவர் கட்சியின் துணைத் தலைவராக நியமிக்கப்படுகிறார் என்று அவர் கூறினார். ஒலிம்பிக் வீரர்களை வெளியேக்கொண்டுவர ஒவ்வொரு பஞ்சாயத்த்து அளவிலும் விளையாட்டு வளாகம் அமைக்கப்படும்.
மக்கள் நீதி மய்யம் ஆட்சி அமையும்போது 50 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உறுதிசெய்யப்படும், பட்டதாரிகளுக்கு வசிப்பிடத்தில் இருந்து 100 சதுர கி.மீ தொலைவிற்குள் பணி உத்தரவாதம் வழங்கப்படும். மக்களிடையே ஒழுக்கம், நேர மேலாண்மையை ஊக்குவிக்க ஆரோக்கியமான தமிழகம் என்ற இயக்கம் தொடங்கப்படும் என தெரிவித்தார்.
பெண்கள், இளைஞர், விளையாட்டு மேம்பாட்டிற்கான ஏழு செயல்திட்டங்களை மக்கள் நீதி மய்யம் அறிவித்தது. இன்று தூத்துக்குடியில் சமத்துவ மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டத்தில் பேசிய சரத்குமார், மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி மற்றும் ஐ.ஜே.கே. கூட்டணி உறுதியானது. எங்கள் கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் கமல்ஹாசன் தான் என கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.